மாணவர் தலைவரை சுட்டவர்கள் இந்தியாவிற்கு தப்பி விட்டனர் சொல்கிறது வங்கதேச போலீஸ்
மாணவர் தலைவரை சுட்டவர்கள் இந்தியாவிற்கு தப்பி விட்டனர் சொல்கிறது வங்கதேச போலீஸ்
ADDED : டிச 29, 2025 03:53 AM
டாக்கா: வங்கதேச மாணவர் அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஓஸ்மான் ஹாதி கொலை வழக்கில் தேடப்படும் இரண்டு முக்கிய குற்றவாளிகள், இந்தியாவின் மேகாலயாவுக்கு தப்பி சென்றுள்ளதாக வங்கதேச போலீசார் தெரிவித்துள்ளனர்.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு ஏற்பட்ட மாணவர் போராட்டத்தின் காரணமாக, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு பதவியிழந்தது.
ஆட்சி கவிழ்ப்புக்கு ஓஸ்மான் ஹாதி என்ற இளைஞர் முக்கிய காரணமாக இருந்தார். இவர், வங்கதேச பார்லிமென்ட் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், கடந்த 12ம் தேதி பைக்கில் வந்த மர்ம நபர்கள், ஹாதி மீது துப்பாக்கியால் சுட்டதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இவரை மேல் சிகிச்சைக்காக தென் கிழக்காசிய நாடான சிங்கப்பூருக்கு அழைத்து சென்ற நிலையில், கடந்த 19ல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
'சிசிடிவி' காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஹாதியை துப்பாக்கியால் சுட்டது பைசல் கரீம் மசூத் என்றும், பைக் ஓட்டி வந்தவர் ஆலம்கீர் ஷேக் என்றும் அடையாளம் கண்டறிந்தனர்.
இது குறித்து வங்கதேச போலீசார் கூறியுள்ளதாவது:
ஹாதியை சுட்டவர்கள் இருவருமே வங்கதேசத்தின் மைமென்சிங்கில் உள்ள ஹலுவாகாட் எல்லை வழியாக இந்தியாவுக்கு தப்பியுள்ளனர். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேகாலயாவின் துரா நகரில் பதுங்கியுள்ளனர். குற்றவாளிகளுக்கு உதவிய புர்தி மற்றும் சமி ஆகிய இருவரை, இந்திய அதிகாரிகள் ஏற்கனவே கைது செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
குற்றவாளிகளை நாடு கடத்தி வருவது பற்றி, இந்திய அரசுடன் பேசி வருகிறோம். ஹாதி கொலை வழக்கு தொடர்பாக இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சதி திட்டத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் 218 கோடி ரூபாய் மதிப்பிலான காசோலையும் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

