வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அலறியடித்து வீட்டை விட்டு ஓடிய மக்கள்
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; அலறியடித்து வீட்டை விட்டு ஓடிய மக்கள்
ADDED : செப் 25, 2025 07:20 AM
கராகஸ்:வெனிசுலாவின் வடமேற்குப் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 என்ற அளவில் பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தலைநகரம் கராகஸிலிருந்து 600 கிலோமீட்டர்களுக்கு தொலைவிலும், மேற்கே உள்ள சுலியா மாநிலத்தில் கிழக்கு-வடகிழக்கே 24 கிலோ மீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நில அதிர்வு 7.8 கிலோமீட்டர் ஆழத்தில் உணரப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலநடுக்கமானது, கொலம்பியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளிலும் உணரப்பட்டது. இந்த நில அதிர்வால் பீதியடைந்த எல்லையோர மக்கள், வீடுகள் மற்றும் அலுவலகக் கட்டடங்களில் இருந்து அலறியடித்து வெளியேறினர். இதுவரையில் சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.
நிலநடுக்கம் ஏற்பட்ட போதும், அதிபர் நிகோலஸ் மடுரோவின் தொலைக்காட்சி நிகழ்ச்சி திட்டமிட்டவாறு நடைபெற்றது.
இதனிடையே, நிலநடுக்கம் ஏற்பட்ட ஒரு மணிநேரம் கழித்து, தகவல் தொடர்பு அமைச்சர் பிரெடி நானேஸ், நாட்டின் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம், 3.9 மற்றும் 5.4 ரிக்டர் அளவுள்ள இரண்டு நில அதிர்வுகள் பதிவாகியதாகக் கூறினார். ஆனால், அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் கணித்த 6.2 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.