குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள் 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்த இந்தியர்கள் 40 பேர் மருத்துவமனையில் அனுமதி
UPDATED : ஆக 14, 2025 08:43 AM
ADDED : ஆக 14, 2025 07:44 AM

புதுடில்லி: குவைத்தில் கள்ளச்சாராயம் குடித்து 40 இந்தியர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் குடும்பத்தினருக்காக உதவி எண்களை இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
அரபு நாடுகளில் ஒன்றான குவைத்தில் மதுபானங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அல் ஷுயூக் எனும் பகுதியில் விற்கப்பட்ட சட்டவிரோத மதுபானத்தை வாங்கி பலர் குடித்துள்ளனர். இதனால், ஏராளமானோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 40 பேர் இந்தியர்கள் ஆவர். இதுவரையில் சிகிச்சை பலனின்றி இந்தியர்கள் உள்பட 10 வெளிநாட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய தூதரக அதிகாரிகள் மருத்துவமனைகளுக்கு நேரில் சென்று, பாதிக்கப்பட்டுள்ள இந்தியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.
இது குறித்து குவைத்துக்கான இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த சில தினங்களில் 40 இந்தியர்கள் மருத்துவமனையில் சிகிச்கைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்தனர். ஒரு சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
குவைத் சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன் இந்தியர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய தூதரக அதிகாரிகளும் நிலைமையை கவனித்து வருகின்றனர். இந்தியர்களின் குடும்பத்தினர் தொடர்புகொள்ள +965-65501587 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். இந்தியர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறோம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.