ஜெர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்: வீடு தீப்பற்றியதில் தெலுங்கானா மாணவர் பலி
ஜெர்மனியில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் சோகம்: வீடு தீப்பற்றியதில் தெலுங்கானா மாணவர் பலி
UPDATED : ஜன 02, 2026 05:06 PM
ADDED : ஜன 02, 2026 03:32 PM

பெர்லின்: ஜெர்மனியில் இந்திய மாணவர் தீ விபத்தில் சிக்கி உயிரிழந்தார். சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வருவதாக இருந்த நிலையில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு;
ஜெர்மனியில் உள்ள ஐரோப்பிய பல்கலை.ஒன்றில் தெலுங்கானாவின் ஜன்கான் மாவட்டம், மல்காபூரைச் சேர்ந்த மாணவர் தோக்லா ஹிர்திக் ரெட்டி (25) என்பவர் உயர்கல்வி படித்து வந்தார். சங்கராந்தி பண்டிகைக்காக சொந்த ஊருக்கு வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்து இருந்தார்.
இந் நிலையில், ஆங்கில புத்தாண்டை தான் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் அவர் கொண்டாடி உள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த வீட்டில் தீப்பிடித்தது. தீயின் நாக்குகளில் இருந்து தப்பிக்க எண்ணிய தோக்லா ஹிர்திக் ரெட்டி, மாடியில் இருந்து குதித்து உள்ளார்.
இதில் தலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த காயம் ஏற்பட, அங்குள்ள உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி உயிரிழந்தார்.
அவரின் உயிரிழப்பு குறித்து குடும்பத்தினருக்கு தகவல் அளிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து, தோக்லா ஹிர்திக் ரெட்டி குடும்பத்தினர் மத்திய வெளியுறவு அமைச்சகத்தை அணுகி உள்ளனர்.

