ஆடாத கால்களும் ஆடுமய்யா!: தமிழர் பாரம்பரிய பரதம்; அரங்கேற்றம் செய்து அசத்திய சீன சிறுமி
ஆடாத கால்களும் ஆடுமய்யா!: தமிழர் பாரம்பரிய பரதம்; அரங்கேற்றம் செய்து அசத்திய சீன சிறுமி
UPDATED : ஆக 13, 2024 01:29 PM
ADDED : ஆக 13, 2024 11:44 AM

பீஜிங்: சீனாவை சேர்ந்த 13 வயது சிறுமி ,தமிழர் பாரம்பரிய நடனமான பரதநாட்டியத்தை சீனாவிலேயே கற்று அரங்கேற்றம் செய்தது பெரும் பாராட்டை பெற்றது.
இந்தியாவின் கலாசார அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது பரதநாட்டியம். தமிழர்களின் பாரம்பரிய நடனமாக பார்க்கப்படும் இது, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் பரவி வளர்ந்துள்ளது. தற்போது நாடு கடந்து சீனாவிலும் பரதநாட்டியம் கால்தடம் பதித்துள்ளது. சீனாவை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி லீ முசி என்பவர், பரதக்கலை பயின்று முதன் முதலாக சீனாவில் அரங்கேற்றம் நடத்தி உள்ளார். புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் மற்றும் இந்திய தூதர்கள், ஏராளமான சீன ரசிகர்கள் முன்னிலையில் மாணவி லீ முசி அரங்கேற்றம் செய்தார்.
பரதம் பயிலும் ஒருவர், குறிப்பிட்ட தேர்ச்சிக்குப் பின்னர், மேடையில் ஆசிரியர்கள், நிபுணர்கள், பார்வையாளர்கள் முன்னிலையில் முதன் முதலில் மேடையில் நடனம் ஆடுவதை 'அரங்கேற்றம் செய்தல்' என்று குறிப்பிடுவார்கள். அரங்கேற்றம் நடத்திய பின்புதான், அவர்கள் தனியாக நிகழ்ச்சிகளில் நடனமாட முடியும் மற்றும் பயிற்சி வழங்க முடியும்.
![]() |
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இந்திய தூதரகத்தின் கலாச்சாரப் பொறுப்பு முதன்மைச் செயலர் டி.எஸ்.விவேகானந்த் கூறுகையில், முறையாக முழுமையாக பயிற்சி பெற்று சீனாவில் நிகழ்த்தப்பட்ட ஒரு மாணவியின் முதல் அரங்கேற்றம் இதுவாகும். இது மிகவும் பாரம்பரியமான முறையில் அரங்கேற்றப்பட்டது'' என்றார்.
சென்னையில் நிகழ்ச்சி
லீ முசிக்கு பயிற்சியளித்த பரதக்கலை ஆசிரியரான ஜின் ஷான் ஷான், 1999ல் டில்லியில் தனது அரங்கேற்றத்தை நடத்தியுள்ளார். இவரது நடன பள்ளியில் கடந்த 10 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்த லீ முசி, சீன பரத கலைஞரின் பயற்சியில் சீனாவிலேயே பரதநாட்டியம் பயின்று, சீனாவிலேயே அரங்கேற்றம் செய்த முதல் நபர் என்ற பெருமையை பெற்றார். 'இது பரதநாட்டிய மரபு வரலாற்றில் ஒரு மைல்கல்' என ஜின் ஷான் ஷான் தெரிவித்துள்ளார்.
அரங்கேற்ற விழாவில் பல பிரபலங்கள், சீன மாணவர்கள் முன்னிலையில் பல வரலாற்று சிறப்புமிக்க பாடல்களுக்கு 2 மணி நேரத்திற்கு மேல், லீ முசி பரதம் ஆடினார். அவருக்கு பலரும் பாராட்டு தெரிவித்தனர். இந்த மாத இறுதியில் சென்னையிலும் நடன நிகழ்ச்சி நடத்த இருக்கிறார்.


