இந்தியா நிலவில் இறங்குது; பாக்., சாக்கடையில் விழுகுது: பார்லி.,யில் எம்.பி., குமுறல்
இந்தியா நிலவில் இறங்குது; பாக்., சாக்கடையில் விழுகுது: பார்லி.,யில் எம்.பி., குமுறல்
ADDED : மே 17, 2024 06:06 AM
இஸ்லாமாபாத் : இந்தியா நிலவில் தரையிறங்கி சாதனை படைக்கும் போது, கராச்சியில் குழந்தைகள் சாக்கடையில் விழுந்து உயிரிழக்கும் அவலத்தை பார்க்கிறேன் என அந்நாட்டு பார்லிமென்டில் எம்.பி., சையத் முஸ்தபா கமல் பேசினார்.
பார்லிமென்டில் பாகிஸ்தான் முட்டாஹிதா குவாமி இயக்கம் என்ற கட்சி தலைவர் சையத் முஸ்தபா கமல் பேசியதாவது:
இன்று உலக நாடுகள் நிலவிற்கு சென்று தரையிறங்கி சாதனை படைக்கின்றன. 'டிவி' திரையில் நிலவில் தரையிறங்கி இந்தியா சாதனை படைத்தது என்ற செய்தி வந்தது. அடுத்த 2 நிமிடங்களில், கராச்சியில் திறந்த வெளி சாக்கடையில் விழுந்து குழந்தை இறந்தது என்ற செய்தியும் வந்தது.
பாகிஸ்தானின் வருவாய்மையமாக கராச்சி உள்ளது. பாகிஸ்தான் உருவானதில் இருந்து கராச்சியில் தான் இரண்டு துறைமுகங்கள் செயல்படுகின்றன. பாகிஸ்தான், மத்திய ஆசியா முதல் ஆப்கன் வரை நுழைவு வாயிலாகவும் இருக்கிறோம்.
ஆனால், 15 ஆண்டுகளாக துாய்மையான குடிநீரை கராச்சி நகருக்கு வழங்க முடியவில்லை. தண்ணீர் வந்தாலும், டேங்கர்மாபியா அதனை பதுக்கி வைத்து மக்களிடம் விற்பனை செய்கின்றனர்.
இவ்வாறு அவர் பேசினார்.
சையத் முஸ்தபா கமலின் இந்த பேச்சு பாகிஸ்தானில் ஆதரவையும் எதிர்ப்பையும் பெற்றுஉள்ளது.

