6000 முறை யானைகள் உயிரை காத்த ஏஐ தொழில்நுட்பம்; தமிழக வனத்துறைக்கு ஒரு சபாஷ்
6000 முறை யானைகள் உயிரை காத்த ஏஐ தொழில்நுட்பம்; தமிழக வனத்துறைக்கு ஒரு சபாஷ்
ADDED : டிச 20, 2025 07:22 PM

சென்னை: கோவை மாவட்டம் மதுக்கரையில் கடந்த 2 ஆண்டுகளில் ரயில் மோதி ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என்று தமிழக காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கூறி உள்ளார்.
கோவை மாவட்டம், மதுக்கரையில் 2021ம் ஆண்டு நவம்பரில் ஒரு குட்டியானை உள்பட 3 யானைகள் ரயிலில் அடிபட்டு மரணித்தன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் உள்ள விலங்குகள் ஆர்வலர்கள், பொதுமக்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
மதுக்கரை அருகேயும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இதுபோன்று யானைகள் ரயிலில் மோதி இறப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட், வனத்துறை மற்றும் தெற்கு ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவை பிறப்பித்து இருந்தது.
அதன் எதிரொலியாக, நாட்டிலேயே முதல் முறையாக ரயில்களில் யானைகள் அடிபட்டு இறப்பதை தடுக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) கேமராக்கள் மூலம் கண்காணிக்கும் கட்டுப்பாட்டு அறை கோவையில் வனத்துறை அமைத்தது. 2023 நவம்பர் முதல், கோவை மதுக்கரையில் செயற்கை நுண்ணறிவு கட்டுப்பாட்டு அறையை அமைத்து, ரயில் தண்டவாளத்தில் யானைகள் நடமாட்டத்தை கண்காணிக்கும் பணிகள் தொடங்கின.
இந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம், யானைகள் நடமாட்டத்தை முன்கூட்டியே அறிந்து, ரயில் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கையை அனுப்புகிறது. அவர்களும் ரயில் வேகத்தை குறைத்தோ அல்லது நிறுத்தியோ யானைகள் பாதுகாப்பாக கடந்து செல்ல உதவுகின்றனர்.
வெற்றிகரமாக செயல்பட்டு வரும் இந்த திட்டத்தின் மூலம், கோவை மாவட்டம், மதுக்கரையில் கடந்த 2 ஆண்டுகளில் ரயில் மோதி ஒரு யானை கூட உயிரிழக்கவில்லை என்று தமிழக காலநிலை மற்றும் வனத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சுப்ரியா சாகு கூறி உள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவின் விவரம் வருமாறு;
தமிழகத்தின் மதுக்கரையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் ரயில் தண்டவாளங்களில் யானைகள் இறக்கவில்லை. ஒரு காலத்தில் யானைகளின் துயரமான இழப்புகளைக் கண்ட அதே தண்டவாளங்களில், நேற்று இரவு(டிச.19), மதுக்கரை AI யானை மையத்தில் எனது குழுவுடன் இருந்தேன்.
முன்கூட்டியே எச்சரிக்கை செய்யும் AI அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்தேன், கிட்டத்தட்ட 6,000 முறை யானைகள் பாதுகாப்பாக தண்டவாளங்களை கடக்க வழி செய்துள்ளது. சிந்தித்து ஒரு தொழில்நுட்பத்தை உரிய முறையில் பயன்படுத்தும்போது மோதலை குறைக்க முடியும் என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. எந்த சிஸ்டமும் எப்போதும் சரியானதாக இருக்காது. ஆனால், இதுபோன்ற தீர்வுகள் எதை தடுக்க வேண்டும், எது சாத்தியம் என்பதை நமக்கு காட்டுகின்றன.
இவ்வாறு சுப்ரியா சாகு தமது பதிவில் கூறி உள்ளார்.

