உலக புத்தொழில் மாநாடு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
உலக புத்தொழில் மாநாடு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
ADDED : செப் 21, 2025 05:59 AM

கோவை : தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் அக்., 9 மற்றும் 10ல் உலக புத்தொழில் மாநாடு, கோவை 'கொடிசியா' அரங்கில் நடக்கிறது. இதில், 35க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 200க்கும் மேற்பட்ட அரசு மற்றும் புதுத்தொழில், புத்தாக்கம் மற்றும் தொழில் முனைவு சார்ந்த பங்குதாரர்கள் பங்கேற்கின்றனர்.
இம்மாநாடு குறித்து மக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் (கோவை வட்டார மையம்) மற்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலையின் உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் சார்பில், சைக்கிள் பேரணி நேற்று நடந்தது.
மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், கொடியசைத்து துவக்கி வைத்தார். 150க்கும் மேற்பட்ட பல்கலை மாணவ, மாணவியர் மாநாட்டு கொடியை சைக்கிளில் ஏந்தியவாறு, பல்கலை வளாகத்தில் துவங்கி லாலி ரோடு, ஆர்.எஸ்.புரம் பிரதான சாலையை கடந்து, 5 கி.மீ., பயணித்து, மீண்டும் பல்கலையை அடைந்தனர்.
பல்கலை துணைவேந்தர்(பொ) தமிழ்வேந்தன், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குனர்(பொ) கோகிலா தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநாடு குறித்து மேலும் தகவல் அறியவும், பதிவு செய்யவும், tngss.startuptn.in என்ற வலைதளத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது 155343 என்ற 'டோல் பிரீ' எண்ணை தொடர்பு கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.