முறைகேடுகளை சரி செய்யாமல் எஸ்.ஐ., வேலைக்கு தேர்வா? காவல்துறை வாரிசுதாரர்கள் எதிர்ப்பு
முறைகேடுகளை சரி செய்யாமல் எஸ்.ஐ., வேலைக்கு தேர்வா? காவல்துறை வாரிசுதாரர்கள் எதிர்ப்பு
ADDED : ஏப் 28, 2025 04:37 AM

சென்னை : சீருடை பணியாளர் தேர்வு வாரியம், ஏற்கனவே நடத்திய எஸ்.ஐ., தேர்வில் முறைகேடு நடந்ததால், அந்த தேர்வு பட்டியல் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், அந்த முறைகேடுகளை சரி செய்யாமல், மீண்டும் போட்டி தேர்வை அறிவித்திருப்பதற்கு, காவல்த்துறை வாரிசுதாரர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம், 621 போலீஸ் எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்ய, 2023 மார்ச், 8ல் அறிவிப்பு வெளியிட்டது. உடல்தகுதி, எழுத்து தேர்வு, நேர்முகத்தேர்வு முடிந்து, தேர்வானவர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், இடஒதுக்கீடு பின்பற்றப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதாவது, பொதுப்பிரிவில் வரும், 31 சதவீத இடங்களுக்கு, தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க வேண்டும். அதில், தேர்வர்களின் ஜாதியை பார்க்கக் கூடாது. ஆனால், வாரியம் வெளியிட்ட பட்டியலில் அதிக மதிப்பெண் எடுத்த, பட்டியலினத்தை சேர்ந்தவர்கள் சேர்க்கப்படவில்லை.
அவர்கள் ஆதிதிராவிட சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு பட்டியலில் சேர்க்கப்பட்டதால், அந்த சமூகத்தை சேர்ந்த வேறு ஆறு பேர், எஸ்.ஐ.,யாகும் வாய்ப்பை இழந்தனர். இதுபோல, பெண்களுக்கான ஒதுக்கீட்டிலும் குளறுபடி நடந்துள்ளது. இந்த முறைகேட்டை சுட்டிக்காட்டி, சிலர் சென்னை உயர்நீதிமன்றம் சென்றனர்.
நீதிமன்றம் அந்த தேர்வு பட்டியலை ரத்து செய்தது. புதிய பட்டியல் வெளியிட, ஜம்மு - காஷ்மீர் உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி பால்வசந்தகுமார் தலைமையில் குழுவை அமைத்துள்ளது.
இந்தச் சூழ்நிலையில், 1,299 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்ய, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டதற்கு, காவல் துறை வாரிசுதாரர்கள் கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அதன் ஒருங்கிணைப்பாளர் வினோத் கூறியதாவது: ஏற்கனவே நடந்த தேர்வில், வாரியம் செய்த தவறால், தேர்வான 621 பேர் வேலைக்கு செல்ல முடியவில்லை. நீதிமன்றத்தில் வாரியம் இரண்டு முறை தேர்வு பட்டியலை தாக்கல் செய்தும், குளறுபடியை சரி செய்ய முடியவில்லை.
அதை சரி செய்யாமல், மீண்டும் தேர்வை அறிவித்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. சீருடை பணியாளர் தேர்வு வாரியம் உடனடியாக, எஸ்.ஐ., தேர்வு அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். அத்துடன் எஸ்.ஐ., தேர்வுக்கான வயது வரம்பை தளர்த்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

