கருணாநிதி நினைவு நாளில் அவரது நினைவு நிறைவேறுமா ? டாக்டர்கள் கேட்பது என்ன ?
கருணாநிதி நினைவு நாளில் அவரது நினைவு நிறைவேறுமா ? டாக்டர்கள் கேட்பது என்ன ?
UPDATED : ஆக 07, 2025 02:06 PM
ADDED : ஆக 07, 2025 12:16 PM

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் ஒளியில் 'எதிலும் தமிழ்நாடு முதலிடம்' எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடை போடுவோம் என தெரிவித்துள்ள முதல்வர், அவர் இயற்றிய அரசாணையை (GO.354) புறக்கணிப்பது ஏன்? என அரசு டாக்டர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.
இது தொடர்பாக அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர், டாக்டர். எஸ். பெருமாள் பிள்ளை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கருணாநிதியில் நினைவு நாளான இன்று ஆகஸ்டு 7 ம் தேதி அவரது நினைவிடம் நோக்கி தமிழக முதல்வர் தலைமையில் பேரணியாக சென்று மரியாதை செலுத்தி உள்ளனர். மேலும் தமிழக முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில் கருணாநிதி குறித்து பெருமையாக பதிவு வெளியிட்டுள்ளார்.
கருணாநிதியின் சாதனைகளால் சிறப்பு பெற்ற தமிழ்நாட்டைக் காத்திட, முன்னேற்றிட உறுதியேற்று, கலைஞரின் ஒளியில் 'எல்லார்க்கும் எல்லாம்' ' எதிலும் தமிழ்நாடு முதலிடம்' எனும் இலக்கை நோக்கி வெற்றிப் பாதையில் நடை போடுவோம் என முதல்வர் தெரிவித்துள்ளார்.
அதேநேரத்தில் உயிர்காக்கும் மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் மட்டுமே உள்ளது என்பது தான் வருத்தமான உண்மை.
அதாவது இந்த ஆட்சியில் ஒருபுறம் கருணாநிதி வழியில் நடைபெறும் ஆட்சி என பெருமையாக குறிப்பிடுகிறார்கள். ஆனால் இன்னொரு புறமோ முன்னாள் முதல்வர் கருணாநிதியின் அரசாணைக்கே (GO.354) தடை போடுகின்றனர்.
அதுவும் திமுக ஆட்சி அமைந்ததும் அரசு மருத்துவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என 2019 ம் ஆண்டு போராட்டத்தின் போது முதல்வர் ஸ்டாலின் நேரில் வந்து உறுதியளித்தார். இருப்பினும் இன்று வரை சொன்னதை செய்யவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது.
எனவே தமிழக முதல்வர் தன் தந்தையின் நினைவு நாளில் அரசு மருத்துவர்கள் மத்தியில் என்றென்றும் நினைத்து பார்க்கப்படும் வகையில், அவரது அரசாணையை (GO. 354) நடைமுறைப்படுத்த வேண்டுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

