பாதி வடையாவது கிடைக்குமா? ஏக்கத்தோடு பார்க்கிறது பா.ஜ.,
பாதி வடையாவது கிடைக்குமா? ஏக்கத்தோடு பார்க்கிறது பா.ஜ.,
ADDED : மே 24, 2025 11:00 PM

தி.மு.க.,வுக்கு செல்லக்கூடிய தெலுங்கு மக்களின் ஓட்டுகளை, வரும் 2026ம் ஆண்டின் சட்டசபை தேர்தலில் பா.ஜ., கூட்டணிக்கு வளைக்க, ஜனசேனா கட்சியின் தலைவரும், துணை முதல்வருமான பவன் கல்யாண் திட்டமிட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலத்தில், ஜனசேனா கட்சி தலைவரான பவன் கல்யாண், அம்மாநில துணை முதல்வராகவும் உள்ளார்.
தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றுள்ள அக்கட்சி, தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இடம்பெற விரும்புகிறது.
தமிழகத்தில் தெலுங்கு மொழி பேசும் மக்கள் மற்றும் மொழிவாரியான சிறுபான்மையினர் ஓட்டுகள், 18 சதவீதம் உள்ளன.
இதில் குறைந்தபட்சம், 8 சதவீத ஓட்டுகள் பா.ஜ., கூட்டணிக்கு கிடைக்க, பவன் கல்யாண் கட்சி அவசியம் என, பா.ஜ., தரப்பும் கருதுகிறது.
இதுகுறித்து, ஜனசேனா கட்சி நிர்வாகிகள் கூறியதாவது:
பவன் கல்யாண், சென்னை தி.நகரில் தங்கி படித்தவர். அதனால், தமிழகம் மற்றும் தமிழக அரசியல் குறித்து நன்கு அறிந்தவர்.
தமிழகத்தில் வாழும் தெலுங்கு பேசும் மக்களின் ஓட்டுகளை, பா.ஜ., கூட்டணிக்கு ஆதரவாக திருப்பி விட விரும்புகிறார்.
இதுவரை தெலுங்கு மக்களின் ஓட்டுகள், தி.மு.க., - ம.தி.மு.க., - தே.மு.தி.க., போன்ற கட்சிகளுக்கு கிடைத்து வந்தன. சில தேர்தல்களில், கணிசமான அளவில் தி.மு.க.,வுக்கு இம்மக்களின் ஆதரவு கிடைத்தது.
இந்நிலையில், தெலுங்கர்களை 'வந்தேறிகள்' என்றும், 'மதுரை திருமலை நாயக்கர் மஹாலை இடிக்க வேண்டும்' என்றும், சில தலைவர்கள் பேசியதை தி.மு.க., அரசு கண்டிக்கவில்லை.
இதனால், அக்கட்சி மீது தெலுங்கு பேசும் மக்கள் வருத்தமாக உள்ளனர். இந்த சூழலில், தமிழகத்தில் கால் பதிக்க விரும்பும் பவன் கல்யாண், இங்குள்ள தெலுங்கு பேசும் அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
எங்கள் கட்சியினர், வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.,வுக்கு எதிராகவும், பா.ஜ.,வுக்கு ஆதரவாகவும் செயல்படுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -

