பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க பரிசீலிக்கப்படுமா?
பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைக்க பரிசீலிக்கப்படுமா?
ADDED : டிச 23, 2025 07:02 AM

சென்னை: 'துாத்துக்குடி பசுமை தாமிர உற்பத்தி ஆலை தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, சமநிலையான அணுகுமுறையாக உள்ளது' என, உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் பி.ஆர்.கோவிலன் பூங்குன்றன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:
'ஸ்டெர்லைட்' தொழிற்சாலை கழிவுகள் தொடர்பான நிலுவை வழக்குகளுடன் இணைத்து, 'வேதாந்தா' குழுமத்தின் மனுவை பட்டியலிட வேண்டும்.
அனுமதி கோரி, தமிழக அரசிடம் புதிதாக விண்ணப்பம் தாக்கல் செய்ய வேண்டும் என, உயர் நீதிமன்றம் கூறியிருப்பது, அனைவரின் நலனையும் கருத்தில் வைத்து, தாமதமின்றி நீதி வழங்கும் சமநிலையான அணுகுமுறையாக உள்ளது.
சர்வதேச அளவில், தாமிரத்தின் தேவை அதிகரித்து வரும் நிலையில், நிலையான தாமிர உற்பத்தி திறன் கொண்ட நாடுகள் முன்னிலை பெறுகின்றன.
இச்சூழலில், எதிர்கால தொழில் துறை போட்டித்திறனை நிர்ணயிக்கும், இந்த முக்கியமான வளத்துறையில், தமிழகம் தனது பங்கை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை, இத்தீர்ப்பு உருவாக்கி உள்ளது.
மேலும், நாடு தற்போது, தாமிர இறக்குமதியை சார்ந்து இருக்கும் நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவு கட்டமைக்கப்பட்ட பாதையை அமைப்பதாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுகுறித்து, 'வேதாந்தா' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
முன்மொழியப்படும், பசுமை தாமிர உற்பத்தி ஆலை, மேம்பட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு அடிப்படையில், 'ஸ்கிராப்' மற்றும் மின் கழிவுகள் மறுசுழற்சி வாயிலாக, தாமிர உற்பத்தியை மேற்கொள்ளும்.
மத்திய சுற்றுச்சூழல் துறை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளின் நிபுணர்கள் குழு அமைத்து, பசுமை தாமிர உற்பத்தி ஆலை அமைப்பதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

