சாராய ஆலை அதிபர்களை கண்டித்து வி.சி.,க்கள் தீர்மானம் போடாதது ஏன்? * ராமதாஸ் கேள்வி
சாராய ஆலை அதிபர்களை கண்டித்து வி.சி.,க்கள் தீர்மானம் போடாதது ஏன்? * ராமதாஸ் கேள்வி
ADDED : அக் 03, 2024 08:14 PM
திண்டிவனம்: பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், நேற்று தைலாபுரத்தில் கூறியதாவது:
செஞ்சி அடுத்த ஆனாங்கூர் ஊராட்சி தலைவரான, பழங்குடி இருளர் வகுப்பை சேர்ந்த சங்கீதாவை, அவரது நாற்காலியில் அமர விடாமலும், கோப்புகளில் கையெழுத்து போட விடாமல் தடுப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. அவருக்கு உரிய அதிகாரம் வழங்குவதை கலெக்டர் உறுதி செய்ய வேண்டும். இல்லாவிட்டால், நானே அவரை அழைத்துச் சென்று, ஊராட்சி தலைவர் இருக்கையில் அமர வைத்து, கோப்புகள் கையெழுத்திடும் இயக்கத்தை நடத்துவேன்.
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், பூரண மதுவிலக்கிற்காக தீர்மானம் கொண்டு வருவது பாராட்டப்பட வேண்டியது. ஆனால், சாராயம் உற்பத்தி செய்யும் ஆலை அதிபர்களை கண்டித்து வி.சி., மாநாட்டில் ஏன் தீர்மானம் போடவில்லை. மது ஆலை நடத்தும் தி.மு.க., பிரதிநிதிகளை மேடையில் வைத்துக்கொண்டு, மதுவிலக்கு பற்றி பேசுவது பயனில்லை. தமிழ்நாட்டில் மட்டும் பூரண மதுவிலக்கு நடைமுறைப்படுத்த வாய்ப்பில்லை என்று, சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார். இந்த சூழ்நிலையில் மாநாடு நடத்தி என்ன பிரயோஜனம்.
தமிழகத்தில், 69 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி, அதன் விபரங்களை தாக்கல் செய்யாவிட்டால், 69 சதவீத இடஒதுக்கீட்டை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்யும் ஆபத்து உள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த முன்வர வேண்டும்.
இவ்வாறு ராமதாஸ் கூறினார்.
'பா.ஜ.,வின் நிழலில் தான் தைலாபுரம் இருக்கிறது. அதனால் தான், அமலாக்க துறை நடவடிக்கை பற்றி பா.ம.க., கண்டனம் தெரிவிக்கவில்லை' என, தி.மு.க.,வை சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி கூறியிருப்பது பற்றி கேட்டதற்கு, ''நான் தைலாபுரத்தில் மரத்தின் நிழலில் தான் இருக்கிறேன். வேறு எந்த நிழலும் இங்கே வராது; நான் விட மாட்டேன். இது பா.ம.க.,வின் கோட்டை. எந்த நிழலும் இங்கே வராமல் நான் பார்த்துக் கொள்வேன்,'' என்றார்.

