UPDATED : ஏப் 20, 2024 11:17 PM
ADDED : ஏப் 20, 2024 11:11 PM

சென்னை : தமிழகத்தின் ஓட்டுப்பதிவு சதவீதம், கடந்த தேர்தலை விட இம்முறை சரிந்தது ஏன் என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ள சூழலில், கொளுத்தும் வெயிலே காரணம் என சூரியனை கைகாட்டுகிறது தேர்தல் ஆணையம்.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில், 71.90 சதவீத ஓட்டுகள் பதிவாகின. இம்முறை 100 சதவீதம் ஓட்டுப்பதிவு என்ற கோஷத்துடன் தேர்தல் கமிஷன் ஏராளமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை எடுத்தது.
பிரசாரம் பலன் இல்லை
ஊடகங்களில் அனைத்து மொழிகளிலும் இடைவிடாத பிரசாரம் செய்யப்பட்டது. சாவடிகளிலும் பயணம் செய்யவும் வாக்காளர்களுக்கு நிறைய வசதிகள், சலுகைகள் செய்யப்பட்டன.
அவ்வளவு செய்தும், 69.94 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகி உள்ளன. தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், கோவை, ராமநாதபுரம், ஆகிய ஐந்து தொகுதிகளில் மட்டுமே, 2019 தேர்தலை விட, இம்முறை ஓட்டுப்பதிவு சதவீதம் அதிகரித்துள்ளது.
இது அனைத்து தரப்பிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த தேர்தலில் இரு முனை போட்டி நிலவியது. இப்போது மும்முனை போட்டி என்பதால் ஓட்டுப்பதிவு நிச்சயம் அதிகரிக்கும் என ஆணையமும், கட்சிகளும் எதிர்பார்த்தன. ஆனால், அதற்கு நேர்மாறாக நடந்துள்ளது.
குறிப்பாக தலைநகர் சென்னையில் குறைந்த சதவீதமே பதிவாகியுள்ளது. கொளுத்தும் வெயிலே முக்கிய காரணம் என்கிறது தேர்தல் ஆணையம்.
'காலையில் விறுவிறுப்பாக துவங்கிய ஓட்டுப் பதிவு, உச்சி வெயில் நேரத்தில் வழக்கம் போல குறைந்தது. அனல் காற்று ஓய்ந்த பின் மீண்டும் அதிகரிக்கும் என எதிர்பார்த்தோம். ஏனோ அப்படி நடக்கவில்லை' என அதிகாரிகள் கூறுகின்றனர்.
அநேக சாவடிகளில் ஏராளமான பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதும் இன்னொரு முக்கிய காரணமா என்ற கேள்விக்கு நேரடியாக அதிகாரிகள் பதில் அளிக்கவில்லை. 'விரைவில் தவறுகள் சரி செய்யப்படும்' என்று மட்டும் கூறினர்.
கள ஆய்வு
நமது நிருபர்கள் குழு நடத்திய கள ஆய்வில், ஓட்டு சதவீதம் சரிய கீழ்க்காணும் காரணங்கள் தெரியவந்தன:
ஒவ்வொரு முறை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி அறிவிக்கும்போதும், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு வீடாக சென்று சரிபார்க்க வேண்டும். இம்முறை அவ்வாறு செய்யவில்லை; உயரதிகாரிகள் கண்காணிக்கவும் இல்லை
வாடகை வீடுகளில் வசிப்பவர்கள் அடிக்கடி வீடு மாறினாலும், முகவரி ஆவணங்களை மாற்றுவது சிரமம் என்பதால் அப்படியே விட்டு விடுவது வழக்கம். தேர்தலன்று பழைய முகவரிக்கு சென்று ஓட்டு போட்டுக் கொள்ளலாம் என நினைப்பர்.
அப்படிப்பட்ட பலரது பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.சிலர் புது முகவரி காட்டியதால் ஓட்டு போடாமல் தடுக்கப்பட்டுள்ளனர்பலர் இரு முகவரியிலும் பெயர் இருந்ததால் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். வாக்காளர் எண்ணிக்கை இருப்பதை விட அதிகமாக தெரியவும் இது ஒரு காரணம்.
தொழில்நுட்பம் வாயிலாக இறந்தவர்கள் பெயர்களை சேகரித்து, பட்டியலில் இருந்து நீக்கி இருக்கின்றனர். ஆனால், அதை பதிவிட்ட முறையில் பிழைகள் காரணமாக தந்தை பெயர் மகனுக்கும், மகன் பெயர் தந்தைக்குமாக மாறியிருக்கிறது. அவர்களும் ஓட்டு போட முடியாமல் போனது
இரண்டு இடத்தில் ஓட்டு இருந்தால், எந்த இடத்தில் உங்களுக்கு ஓட்டுரிமை வேண்டும் என கேட்டு, அவர் விரும்பாத இடத்தில் நீக்கப்படும் என ஆணையம் கூறியது. ஆனால், வாக்காளரின் விருப்பம் என்ன என்று கேட்காமலே பல பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன
ஒரு ஓட்டுச்சாவடியில் 1,000 ஓட்டுகள் இருப்பதாக, வாக்காளர் பட்டியல் காட்டியது. கட்சிக்காரார்கள் வீடு வீடாக சென்றபோது, 600 வாக்காளர்களே இருந்தனர். இதனால், ஒரே ஒரு சாவடியில் 400 ஓட்டு அதிகமாக காட்டியது பட்டியல். அவர்கள் இடம் பெயர்ந்தனரா, சொந்த ஊருக்கே திரும்பினரா என்று அறிய ஆணையம் ஆர்வம் காட்டவில்லை
உதாரணமாக கோவை வடக்கு தொகுதியில், பூத் எண்: 230 ரங்கநாதர் வீதியில், 368 வாக்காளர்கள் இருப்பதாக பட்டியல் காட்டுகிறது.
வீடு வீடாக சென்று பார்த்தபோது, வெறும் 73 வாக்காளர்களே வசிப்பது தெரிந்தது. 68 பேர் இரு கி.மீ., சுற்றளவுக்குள் வீடு மாறியுள்ளனர். 33 பேர் இறந்து விட்டனர். நான்கு பெயர்கள் இரட்டை பதிவு. 190 பேர் எங்கே என்றே தெரியவில்லை.இது பற்றி தேர்தல் பிரிவில் புகார் கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
வீடு வீடாக சோதிக்க ஆளில்லை என கூறுகின்றனர். சனி, ஞாயிறு விடுமுறை சேர்ந்து கிடைப்பதால், தேர்தல் கடமை பற்றி கவலைப்படாமல் நிறைய பேர் ஊருக்கு சென்று விட்டனர்.

