ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்: விமர்சனத்துக்கு சீமான் பதில்
ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது ஏன்: விமர்சனத்துக்கு சீமான் பதில்
ADDED : டிச 13, 2025 01:14 PM

சென்னை: சென்னையில் நடந்த ஆர்எஸ்எஸ் நிகழ்வில் கலந்து கொண்டது விமர்சனத்திற்கு உள்ளானது குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்தார்.
ஆர்.எஸ்.எஸ்.,சின் பொது விவாத நிகழ்ச்சிகளை நடத்தும் அமைப்பான, 'விஜில்' சார்பில், சென்னை, ராஜா அண்ணாமலை மன்றத்தில், 'பாரதி பிறந்த தினம் மற்றும் வந்தே மாதரம் 150வது ஆண்டு தினம்' விழா நடந்தது.
'பாரதி கண்ட பங்கிம் சந்திர சட்டர்ஜியின் வந்தே மாதரம்: தமிழ் இளைஞர்களின் பார்வைக்கு' என்ற தலைப்பில் இந்த விழாவில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், கவிஞர் வைரபாரதி ஆகியோர் பேசினர்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றது குறித்து நிருபர்களிடம் சீமான் கூறியதாவது:
கலந்து கொண்டது குறித்து விமர்சனங்கள் ஏதும் இல்லை என்றால் ஏன் கலந்து கொள்ள வேண்டும்? ஆர்எஸ்எஸ் மற்றும் திமுக சமூக இயக்கங்கள் என்று சொன்னது நானா, அவர்களா? அது ஆர்எஸ்எஸ் இயக்கம் அது எல்லாம் கிடையாது. இலக்கிய அமைப்பு பாரதி பற்றி பேசு என்று சொன்னார்கள். நான் பாரதியை எங்கும் பேசுவேன். பாரதி இருக்கிற இடத்தில், பாரதி என்பது தமிழ். தமிழ் என்பது எனது தாய்.
திமுக கூட்டத்திலும்...!
தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பேன். அவ்வளவு தானே, நாளைக்கு திமுகவை பாரதி பற்றி கூட்டம் போட சொல்லுங்கள், நான் போய் பேசுகிறேன். 12 வருடம் திராவிட கழகம் மேடையில் பேசும் போது இனித்தது. ராஜ்நாத் சிங் உங்கள் தந்தையின் காசுவை வெளியிட்டார். பாஜவுக்கு 5 ஆண்டுகள் நிலையான ஆட்சியை கொடுத்து, இந்தியா முழுமைக்கும் தனது அதிகார கிளையை பரப்புவதற்கு உதவியாக இருந்தவர் கருணாநிதி என ராஜ்நாத் சிங் பேசியது வீடியோ இருக்கிறது போட்டு காட்டவா?
இதற்கு கருத்து?
இன்றைக்கு வேல்ஸ் திறப்பு விழாவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பங்கேற்கும் போது உங்கள் அமைச்சர், உங்கள் ராஜ்யசபா எம்பி கமல் பங்கேற்கிறார்களே இதற்கு கருத்து? எங்க போய் நிற்கிறேன் என்று பேசாதே, என்ன பேசினேன் என்று பேசுங்கள். இவ்வாறு சீமான் கூறினார்.

