காட்டு பன்றிகளை சுட யாருக்கு அனுமதி: பொன்முடி விளக்கம்
காட்டு பன்றிகளை சுட யாருக்கு அனுமதி: பொன்முடி விளக்கம்
ADDED : ஜன 10, 2025 11:42 PM
சென்னை:“காப்புக்காட்டில் இருந்து, 3 கி.மீ., தொலைவிற்கு மேல் உள்ள பகுதிகளில் நடமாடும் காட்டுப் பன்றிகளை சுட, வனத் துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது,” என, அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
சட்டசபையில், அமைச்சர் பொன்முடி கூறியதாவது:
காப்புக் காட்டில் இருந்து 1 கி.மீ., தொலைவு வரை, காட்டுப் பன்றிகளை சுட அனுமதி கிடையாது. அதே நேரத்தில் காப்புக் காட்டில் இருந்து, 1 கி.மீ., தொலைவு முதல், 3 கி.மீ., தொலைவு வரை உள்ள பகுதிகளில் நடமாடினால், காட்டுப் பன்றியை பிடித்து, மீண்டும் வனப்பகுதிக்குள் விட வேண்டும்.
வனப் பகுதியில் இருந்து, 3 கி.மீ., தொலைவுக்கு அப்பால் உள்ள பகுதிக்கு, காட்டுப் பன்றிகள் வந்தால், அவற்றை வனத் துறையினர் சுட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் சுட அதிகாரம் கேட்டுள்ளனர். பின்னர் பரிசீலிக்கப்படும்.
காட்டுப் பன்றிகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க, அனைத்து நடவடிக்கைகளையும் வனத்துறை எடுத்து வருகிறது.
யானைகள் குறித்து பேசினர். அவற்றால் பயிர் சேதம், உயிர் சேதம் ஏற்படுவதாக தெரிவித்தனர்.
தமிழ்நாடு யானைகள் பாதுகாப்பு திட்டம், தமிழ்நாடு உயிர்பன்மை பாதுகாப்பு மற்றும் பசுமையாக்கல் திட்டம் வழியாக, 2.39 கோடி ரூபாய் செலவில், 46.5 கி.மீ., தொலைவுக்கு யானை புகா அகழி வெட்டப்பட்டுள்ளது. சூரிய மின் வேலிகள் அமைக்கப்படுகின்றன.
மயில் தேசிய பறவை. இவற்றால் பாதிப்பு ஏற்படுவதை தடுத்து நிறுத்தவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மனித - விலங்கு மோதல்களால் ஏற்படும் உயிரிழப்புக்கு, தற்போது 10 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்படுகிறது.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

