ADDED : பிப் 27, 2024 11:42 PM
சென்னை:வருமானத்துக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகளில், அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வளர்மதி ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.
இந்த உத்தரவுகளை மறுஆய்வு செய்யும் விதமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்தார். அதன்படி நான்கு வழக்குகளும், நேற்று விசாரணைக்கு வந்தன. முன்னாள் அமைச்சர் வளர்மதிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்திருப்பதால், விசாரணையை செப்டம்பருக்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, சாத்துார் ராமச்சந்திரன் மற்றும் முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் தரப்பில், மூத்த வழக்கறிஞர்கள் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளி வைக்கும்படி கோரப்பட்டது.
இதையடுத்து, தங்கம் தென்னரசு தொடர்பான வழக்கின் விசாரணையை, இன்றைக்கு நீதிபதி தள்ளி வைத்தார். நாளை மற்றும் மார்ச் 5ம் தேதி, விசாரணை தொடரும் என தெரிவித்தார்.
பன்னீர்செல்வம் தொடர்பான வழக்கின் விசாரணை, மார்ச் 5, 6ம் தேதிகள்; சாத்துார் ராமச்சந்திரன் தொடர்பான வழக்கின் விசாரணை, மார்ச் 7, 8ம் தேதிகளில் நடக்கும் எனவும் நீதிபதி அறிவித்தார்.
லஞ்ச ஒழிப்புத் துறை தரப்பில், மார்ச் 8ல் துவங்கி, 11ல் வாதங்களை நிறைவு செய்து கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

