சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் என்ன பிரச்னை?: ஐகோர்ட் கேள்வி
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் என்ன பிரச்னை?: ஐகோர்ட் கேள்வி
UPDATED : ஜன 23, 2024 05:40 PM
ADDED : ஜன 23, 2024 04:10 PM

சென்னை: சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது என தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிட கோரி மறைந்த தேமுதிக., தலைவர் விஜயகாந்த், அதிமுக கொறடா எஸ்.பி., வேலுமணி உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது நீதிமன்றம்
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரலை செய்வதில் என்ன பிரச்னை உள்ளது. பார்லிமென்டில் அனைத்து நடவடிக்கைகளும் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் போது தமிழகத்தில் என்ன பிரச்னை உள்ளது எனக்கேள்வி எழுப்பியது.
இதற்கு தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கேள்வி நேரம், கவன ஈர்ப்பு தீர்மானங்கள் மீதான விவாதங்கள், கவர்னர் உரை, பட்ஜெட், அமைச்சர்களின் பதிலுரைகள் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
பேரவையில் சில சமயம் உறுப்பினர்கள் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்க வாய்ப்பு உள்ளது. சில சமயம் எம்.எல்.ஏ.,க்களின் பேச்சுக்கள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படும் சூழல் உள்ளது. இதனால் சட்டசபை நடவடிக்கை முழுவதையும் நேரடியாக ஒளிபரப்பு செய்ய இயலாது என விளக்கம் அளித்தார்.
இதனையடுத்து, இந்த வழக்கில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டு மார்ச் 11ம் தேதிக்கு விசாரணையை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

