தென்பெண்ணையில் வீணாகும் நீரை 62 ஏரிகளில் நிரப்பும் திட்டம் என்னாச்சு?
தென்பெண்ணையில் வீணாகும் நீரை 62 ஏரிகளில் நிரப்பும் திட்டம் என்னாச்சு?
UPDATED : மே 04, 2025 01:34 AM
ADDED : மே 04, 2025 01:12 AM

ஓசூர்:தமிழக எல்லையில், ஓசூர் அடுத்த பாகலுார் சுற்றுவட்டாரத்தில் உள்ள, 62 ஏரிகளில், 300 கோடி ரூபாய் மதிப்பில் நீர் நிரப்பும் திட்டத்தை தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், நந்திமலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, 112 கி.மீ., துாரம் பயணம் செய்து, ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணையை அடைகிறது. இங்கிருந்து, கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு உபரிநீர் திறந்து விடப்படுகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி மற்றும் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணை வாயிலாக, 17,018 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையின் உபரிநீரை, உத்தனப்பள்ளி, கெலமங்கலம் சுற்றுப்புற பகுதிகளில் உள்ள ஏரிகளில் நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக உள்ளது. ஆனால், இத்திட்டத்தை செயல்படுத்த அரசு தீவிரம் காட்டவில்லை.
பாகலுார் சுற்றுவட்டாரப் பகுதியில், தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே உள்ள கொடியாளம் தடுப்பணையில் இருந்து மின்மோட்டார் அமைத்து குழாய் வாயிலாக, 62 ஏரிகளில் நீர் நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என, 2017ல், கிருஷ்ணகிரியில் நடந்த எம்.ஜி.ஆர்., நுாற்றாண்டு விழாவில், அப்போதைய முதல்வர் பழனிசாமி அறிவித்தார். இத்திட்டம், 300 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, 2.50 லட்சம் ரூபாயை அ.தி.மு.க., அரசு ஒதுக்கீடு செய்தது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஆன போதும், இதுவரை செயல்பாட்டிற்கு வரவில்லை. தி.மு.க., ஆட்சிக்கு வந்து, நான்கு ஆண்டுகள் ஆகிவிட்டன.
கடந்த, 2023ல் நீர்வளத்துறை தலைமை பொறியாளருக்கு சாத்தியக்கூறு இருப்பதாக அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், திட்டம் செயல்பாட்டுக்காக நிதி ஒதுக்கீடு பற்றிய அறிவிப்பு ஏதும் இல்லை.
அ.தி.மு.க., ஆட்சியில் அறிவிக்கப்பட்ட இத்திட்டத்தை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது. 62 ஏரிகளில் கெலவரப்பள்ளி அணை நீரை நிரப்பினால், நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயிகள் பயன்பெறுவர்.
கர்நாடக அரசு, தென்பெண்ணை நீரை அம்மாநிலத்தில் உள்ள ஏரிகளில் நிரப்பி, நிலத்தடி நீர்மட்டம் மற்றும் விவசாயத்தை பாதுகாத்து வருகிறது. ஆனால், தமிழக எல்லையில், 45 கி.மீ., துாரம் பைப்லைன் அமைத்து, 62 ஏரிகளுக்கு தென்பெண்ணை ஆற்று நீரை நிரப்பும் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்த தயக்கம் காட்டுகிறது.
நிதி ஒதுக்கவே நீண்ட காலம் ஆக்கினால், திட்ட மதிப்பீடு மேலும் உயரும். தமிழக அரசு காலம் தாழ்த்தாமல், இத்திட்டத்தை செயல்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஒற்றை ரூபாய் கூட தி.மு.க., அரசு ஒதுக்கவில்லை
ஒவ்வொரு ஆண்டும், 22 டி.எம்.சி., தென்பெண்ணை ஆற்றுநீர், வீணாக கடலில் கலக்கிறது. உபரிநீரை ஏரிகளில் நிரப்ப பல ஆண்டுகளாக கேட்டு வருகிறோம். ஏரிகள் நிரம்பாமல் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, விவசாயம் பொய்த்து வருகிறது. அரசால் செய்யக்கூடிய, சாத்தியமுள்ள இத்திட்டத்தை கூட செய்யாமல் நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் தான், மாவட்டத்தில் ஆழியாளம், வாணிஒட்டு, எண்ணேக்கோல் திட்டத்தை தி.மு.க., அரசு முறையாக செயல்படுத்தவில்லை. எண்ணேக்கோல், வாணிஒட்டு போன்ற திட்டங்களுக்கு அ.தி.மு.க., ஆட்சியில் ஒதுக்கப்பட்ட நிதியை வைத்து தான் பணிகளை செய்கின்றனர். தி.மு.க., அரசு 1 ரூபாய் கூட ஒதுக்கவில்லை. திட்டங்கள் முடக்கப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிருப்தியில் உள்ளனர்.
- ராமகவுண்டர்,
மாநில தலைவர், தமிழக விவசாயிகள் சங்கம்

