ADDED : ஜூலை 22, 2025 04:07 AM

திருவாரூர்: விவசாயிகளுக்காக அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் தி.மு.க., அரசு நிறுத்தி விட்டதாக, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.
திருவாரூரில் நேற்று விவசாயிகளை சந்தித்து, கலந்துரையாடிய பழனிசாமி பேசியதாவது:
மேட்டூர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், வழி நெடுகிலும் கழிவுநீர் கலந்து மாசுபடுகிறது.
காவிரி நீர், 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. காவிரி நீரை சுத்தம் செய்வதற்காக, அ.தி.மு,க., ஆட்சியில், 'நடந்தாய் வாழி காவிரி' திட்டம் கொண்டு வந்து, மத்திய அரசிடம் 990 கோடி ரூபாய் நிதி பெறப்பட்டது. இந்த திட்டத்தை, தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுவிட்டது.
காவிரி - கோதாவரி இணைப்பு திட்டத்தை நிறைவேற்றினால், 125 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கும் என்பதால், பிரதமரிடம் கடிதம் அளித்து முயற்சி எடுத்தோம்.
அப்போதைய ஆந்திரா, தெலுங்கானா முதல்வர்களும் திட்டத்தை ஏற்றுக் கொண்டனர். இந்த திட்டத்தையும், தி.மு.க., அரசு கிடப்பில் போட்டுள்ளது.
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, காவிரி நீரை கர்நாடகா தருவதில்லை; அணைகள் நிரம்பினால் மட்டுமே தண்ணீர் திறக்கப்படுகிறது. இதனால், குறித்த காலத்தில் சாகுபடி செய்யாமல் விளைச்சல் குறைகிறது.
'இண்டி' கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தான் கர்நாடகாவில் ஆட்சி செய்கிறது. அதே கூட்டணியில் இருக்கும் தி.மு.க., ஆட்சியாளர்கள் இதை கண்டு கொள்வதில்லை.
காவிரி நீர், கடைமடை வரை செல்வதற்காக, டெல்டா மாவட்டங்களில், 36,000 கி.மீ.,க்கு கால்வாய் சீரமைக்க திட்டமிட்டு, மத்திய அரசிடம் ஒப்புதலையும் அ.தி.மு.க., ஆட்சியில் பெற்றோம்.
இதனால், 20 சதவீதம் தண்ணீர் மிச்சமாகும். ஆனால், தற்போதைய தி.மு.க., அரசு, மத்திய அரசுடன் இணக்கமாக இல்லாததால், திட்டத்தை கிடப்பில் போட்டுவிட்டது.
நீர் மேலாண்மைக்கு தனிப்பிரிவை செயல்படுத்தி, கடலில் கலந்து வீணாகும் தண்ணீரை தடுக்க வேண்டும். ராசி மணலில் அணை கட்டினால், 62 டி.எம்.சி., தண்ணீரை தேக்கி வைக்க முடியும்.
சேலம் மாவட்டத்தில், ஆசியாவிலேயே பெரிய கால்நடை பூங்கா, 20 ஏக்கரில், 1,500 கோடி ரூபாய் செலவில் அ.தி.மு.க., ஆட்சியில் அமைக்கப்பட்டது.
கால்நடை மருத்துவக் கல்லுாரி முடியும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் இத்திட்டத்தையும் தி.மு.க., அரசு முழுமையாக முடிக்கவில்லை. இலவச கலப்பின பசுக்களை விவசாயிகளுக்கு வழங்கும் இத்திட்டம், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் முழுமையாக நிறைவேற்றப்படும். இவ்வாறு பழனிசாமி பேசினார்.

