இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?
இளையராஜா வருகையின் போது ஸ்ரீவில்லிபுத்துார் கோவிலில் நடந்தது என்ன?
UPDATED : டிச 16, 2024 04:26 PM
ADDED : டிச 16, 2024 02:22 PM

ஸ்ரீவில்லிபுத்துார்: இசைஞானி இளையராஜா ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்பது பற்றி, மதுரை மண்டல இணை கமிஷனர் செல்லதுரை, விருதுநகர் கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.
இசைஞானி இளையராஜா, நேற்று முன்தினம் இரவு ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவருக்கு கோவில் வாசலிலேயே யானையை கொண்டு வரவேற்பு அளிக்கப்பட்டது. கோவிலுக்குள் சென்ற அவருக்கு, பரிவட்டம் கட்டி மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. ஜீயர் சுவாமிகளும் இளையராஜாவுக்கு மரியாதை செய்தார். இந்நிலையில், கருவறைக்குள் இளையராஜாவை அனுமதிக்கவில்லை என்றும், அவர் அவமதிக்கப்பட்டதாகவும், தகவல்கள் வெளியாகி சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
பொதுவாக கோவில் கருவறை என்று அழைக்கப்படும் கர்ப்ப கிரகத்தில் ஆதீனங்கள், மடாதிபதிகள், தக்கார்கள், அறங்காவலர்கள் போன்றவர்களும், மற்ற யாரும் உள்ளே செல்ல அனுமதியில்லை.
கருவறையில் அந்தந்த கோவிலில் பூஜை செய்யும் ஸ்தானிகர்கள், பட்டாச்சாரியார்கள், பரம்பரை குருக்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். அதே கோவிலில், வேறு சன்னதியில் பூஜை செய்யும் குருக்களாக இருந்தாலும் கருவறைக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. ஆகம விதிப்படி கட்டிய கோவில்களில், பண்டைய காலத்தில் இருந்து கடைபிடிக்கப்படும் நடைமுறை இதுதான்.
கர்ப்ப கிரகத்தின் முன் உள்ள இடம் அர்த்தமண்டபம். இந்த மண்டபத்தில் பட்டர், குருக்கள் ஓதுவார்கள், மடாதிபதிகள், கோவில் அறங்காவலர்கள் அனுமதிக்கப்படுவர். இது, இடத்தை பொறுத்து கோவில் நிர்வாகத்தால் முடிவு செய்யப்படும்.அப்படி இருக்கையில், இளையராஜாவை முன் வைத்து இந்த சர்ச்சை வேண்டுமென்றே திட்டமிட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக, சந்தேகம் எழுந்துள்ளது.இதற்கிடையே, இளையராஜா கோவிலுக்கு வந்தபோது நடந்தது என்ன என்று, அறநிலையத்துறை அறிக்கை அளித்துள்ளது.
'ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் சன்னதி அர்த்தமண்டபத்தில் (கர்ப்ப கிரகம் முன் உள்ள இடம்) மடாதிபதிகள், அர்ச்சகர்கள் தவிர, மற்றவர்கள் உள்ளே செல்ல கோவில் வழக்கப்படி அனுமதி இல்லை' என திரிதண்டி ஜீயர் தெரிவித்ததை இளையராஜா ஏற்றுக்கொண்டு அர்த்தமண்டபம் முன் நின்று தரிசனம் செய்தார் என்று, மதுரை மண்டல அறநிலையத்துறை இணை கமிஷனர் செல்லத்துரை விருதுநகர் மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளித்துள்ளார்.
![]() ஆண்டாள் கோவிலில் தரிசனம் முடிந்த பிறகு, திரிதண்டி நாராயண ராமானுஜ ஜீயர் சுவாமிகள், ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமிகள் ஆகியோருடன் சிரித்து பேசியபடி வரும் இளையராஜா. |


