கூட்டணியில் இருந்து வெளியேற்றினாலும் கவலைப்பட மாட்டோம்: திருமாவளவன்
கூட்டணியில் இருந்து வெளியேற்றினாலும் கவலைப்பட மாட்டோம்: திருமாவளவன்
ADDED : டிச 23, 2025 08:00 PM

மதுரை : ''தி.மு.க., கூட்டணியில் இருந்து, வி.சி.,யை வெளியேற்றினாலும், நாங்கள் கவலைப்பட மாட்டோம்,'' என, வி.சி., தலைவர் திருமாவளவன் பேசினார்.
மதுரை, திருப்பரங்குன்றத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், வி.சி., தலைவர் திருமாவளவன் பேசியதாவது:தி.மு.க., ஆட்சியில் எதிர்த்து போராட பல விஷயங்கள் உள்ளன. ஆனால் பா.ஜ.,வினர், திருப்பரங்குன்ற விவகாரத்தை மட்டுமே கையில் எடுத்துள்ளனர். அயோத்தி போல் திருப்பரங்குன்றத்தில், பா.ஜ.,வால் எதுவும் செய்ய முடியாது. ஓட்டுக்காக பொது வாழ்க்கைக்கு வரவில்லை. இப்படி பேசினால், தி.மு.க., எங்களை கூட்டணியில் வைத்திருக்குமா, வைத்திருக்காதா என்பது குறித்தெல்லாம் நாங்கள் கவலைப்பட மாட்டோம்.
திருமாவளவனை கூட்டணியில் வைத்திருப்பதால் சிக்கல் வரும் என, தி.மு.க., நினைத்தால், அதற்காக ஒரு நாளும் கவலைப்பட மாட்டோம். நாங்கள் மத நல்லிணக்கத்தை விரும்புகிறோம். சிறுபான்மையின மக்கள் எனக் கூறுபவர்கள், யாரும் அன்னிய நாட்டை சேர்ந்தவர்கள் இல்லை; எங்கள் ரத்த சொந்தங்கள். அவர்களை அன்னியர்களாக சித்தரிக்க பார்க்கின்றனர்.நான் தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியே வரவில்லை என்பது தான், தமிழிசை போன்ற பா.ஜ.,வினரின் கவலை. தி.மு.க.,வுடன் சேர்ந்து, சனாதானிகளை எதிர்க்கிறோம். எங்களுக்கு இடம் தான் அதிகம் வேண்டுமென்றால், ஒரு பக்கம் பா.ஜ.,விடமும், அ.தி.மு.க.,வுடனும், த.வெ.க.,வுடனும் பேச முடியும்.
எல்லாரிடமும் நம்மால் பேச முடியும் என, தி.மு.க.,வுக்கும் நம்மால் காட்ட முடியும். அதெல்லாம் நமக்கு பொருட்டே இல்லை. ஆனால், எல்லா கதவையும் மூடிவிட்டு நிற்கிறேன் என்றால், நான் என்ன முட்டாளா, விபரம் தெரியாதவனா?எல்லோரும் சொல்வது மாதிரி, நான் ஏன் நான்கு சீட்டுக்கும், ஆறு சீட்டுக்கும் இங்கே நிற்க வேண்டும்; ஏன் நிற்கிறேன் என்றால், நான் அம்பேத்கரின் மாணவன், ஈ.வெ.ரா.,வின் பிள்ளை. அரசியல்வாதிகள் யாரும் எல்லா கதவையும் அடைத்து விட்டு அரசியல் செய்ய மாட்டர். ஆனால், நான் எல்லா கதவையும் அடைத்து விட்டு அரசியல் செய்கிறேன்.
பா.ம.க.,வுடன் உறவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன். பா.ம.க., இரண்டாக உடைந்து விட்டது. உடைந்ததில் ஒன்று இங்கே வந்தால், ஏற்பீர்களா என கேட்கின்றனர். ஆனால், நாங்கள் ஏற்க மாட்டோம். ஜாதியவாத, மதவாத சக்திகளுடன் சில இடங்களுக்காக, நாங்கள் சமரசம் செய்ய மாட்டோம். தி.மு.க.,வுடன் கூட்டணியில் எவ்வளவு இடங்கள் வேண்டும் என்பதை, தொகுதி பங்கீட்டில் நாங்கள் இறுதி செய்து கொள்கிறோம். அந்த இடங்கள் போதுமா, போதாதா என்பதை, கட்சி தலைமை குழு முடிவெடுக்கும்.
பா.ஜ.,வை ஆதரித்தால், சில இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். எல்.முருகன் போன்று, எனக்கும் தனிப்பட்ட முறையில் பதவிகள் கிடைக்கலாம். ஆனால், எனது சொந்தங்களிடம் உறவாவடி, சமூக நீதியை பேச முடியாது. பதவி இருக்கிறதோ, இல்லையோ, இறுதி மூச்சு வரை அம்பேத்கர் மாணவனாக, ஈ.வெ.ரா., பிள்ளையாக வாழ்ந்து இறந்தான் என்பது தான், திருமாவளவன் குறித்த செய்தியாக இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

