ஆளுங்கட்சியை துணிவுடன் எதிர்கொள்வோம்: தினகரன் உறுதி
ஆளுங்கட்சியை துணிவுடன் எதிர்கொள்வோம்: தினகரன் உறுதி
ADDED : ஜூன் 16, 2024 05:09 PM

சென்னை: 'விக்கிரவாண்டி இடைத்தேர்தல், தே.ஜ., கூட்டணியின் வெற்றிக்கணக்கை துவங்கிடும் தேர்தலாக அமையட்டும். தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு, தீவிர தேர்தல் களப்பணியாற்றிட வேண்டும்' என, அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தே.ஜ., கூட்டணி சார்பில், பா.ம.க.,வின் சி.அன்புமணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். ஆட்சி அதிகாரத்தை சுயநலத்திற்காக மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஆளும் தி.மு.க.,வை எதிர்கொள்ளமுடியாமல், பழனிசாமி தேர்தல் களத்திலிருந்து வெளியேறியுள்ளார். இதன் வாயிலாக, பழனிசாமியை, தமிழக மக்கள் ஏற்கனவே புறக்கணித்துவிட்டனர் என்பது தெளிவாகிறது.
அராஜகத்திற்கும், அத்துமீறல்களுக்கும் அடையாளமாகிப்போன, தி.மு.க.,விற்கும், மக்களை சந்திக்க முடியாமல் தேர்தலை புறக்கணித்து, புறமுதுகிட்டு ஓடும் பழனிசாமிக்கும், தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.
தடைகளையும், எதிர்ப்புகளையும் துணிவுடன் எதிர்கொண்டு, தீவிர தேர்தல் களப்பணியாற்றுவோம். அரசியல் நெருக்கடிகளையும் சூழ்ச்சிகளையும் முறியடித்து, தே.ஜ., கூட்டணிக்கு வெற்றி முத்திரையை பதித்திடுவோம். இதற்காக கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தினகரன் கூறியுள்ளார்.

