கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
கூட்டணியில் அதிக தொகுதிகளை கேட்போம்; மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம் பேட்டி
ADDED : டிச 22, 2025 07:52 AM

பெரியகுளம்: ''சட்டசபை தேர்தலில் தி.மு.க., கூட்டணியில் மார்க்சிஸ்ட் சார்பில் அதிக தொகுதிகளை கேட்போம்,'' என, தேனி மாவட்டம் பெரிய குளத்தில் அக்கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் தெரிவித்தார்.
பெரியகுளத்தில் மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இறந்த முன்னாள் நிர்வாகிகள் 16 பேரின் புகைப்படங்களை மாநிலச் செயலாளர் சண்முகம் திறந்து வைத்தார். பின் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்த சிறப்பு தீவிர திருத்தப்பணியில் 97.38 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. இதில் ஓராண்டில் இறந்து போனவர்கள் 26 லட்சம் பேர் என்பது நம்பும்படி இல்லை.
தேர்தல் கமிஷன் ஓட்டுரிமையை அனைவருக்கும் வழங்க முயற்சி எடுக்க வேண்டும். ஆனால் வாக்காளர்களை நீக்குவதில் தான் தேர்தல் கமிஷன் ஆர்வம் காட்டி உள்ளது. தீவிர திருத்தப் பணி நடவடிக்கைகளை இத்துடன் நிறுத்திட வேண்டும். இது சம்பந்தமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளோம். நீதிமன்றத்தில் விசாரணை முடிந்த நிலையில் தீர்ப்புக்காக வழக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கேட்போம்.
தமிழகத்தில் செவிலியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதல்வர் ஸ்டாலின் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். தமிழகத்தில் ஆண்டு தோறும் பல லட்சம் ஐயப்ப பக்தர்கள் விரதம் மேற்கொள்கின்றனர். இந்த நேரத்தில் ஒரு முட்டை விலை ரூ.6.50 என்பது அதிகபட்சமாக உள்ளது.
முட்டை உற்பத்தியாளர்கள் முட்டை விலையை திட்டமிட்டு உயர்த்துகின்றனரா என தமிழக அரசு கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும் என்றார். மத்திய குழு உறுப்பினர் பாலபாரதி, மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், தாலுகா செயலாளர் முருகன் உடனிருந்தனர்.

