ADDED : மார் 21, 2024 12:43 AM
''நாங்கள் துணிச்சலாக தேர்தலை சந்திக்கிறோம். மக்கள் எங்களுக்கு முழுமையான ஆதரவு கொடுப்பர். 40 தொகுதிகளிலும், அ.தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெறுவர்,'' என, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி தெரிவித்தார்.
அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில், முதல் கட்டமாக 16 தொகுதி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, அவர் கூறியதாவது:
லோக்சபா தேர்தலில், அ.தி.மு.க.,வின் முதல் வேட்பாளர் பட்டியலில் 16 பேர் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
கூட்டணியில், தே.மு.தி.க.,வுக்கு ஐந்து தொகுதிகள் வழங்கப்படும். புதிய தமிழகம் கிருஷ்ணசாமிக்கும், எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கும் தலா ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பா.ம.க., உடன் பேச்சு நடத்தவில்லை; நடத்தி இருந்தால் தெரிவித்திருப்பேன். தேர்தல் அறிக்கையை விரைவில் எதிர்பார்க்கலாம்.
அ.தி.மு.க., சொந்தக் காலில் நிற்கிற கட்சி. கூட்டணிக்கு யாராவது வந்தால் வரவேற்போம்; வராவிட்டால் மகிழ்ச்சி. யாரையும் வற்புறுத்தி ஒரு கட்சியில் இணைக்க முடியாது.
ஜெயலலிதா இருந்தபோது, 2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும், அ.தி.மு.க., வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெற்றது.
கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றிக்கு கூடுதல் கவனம் செலுத்துவோம்.
எங்களுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. அ.தி.மு.க., மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் நிச்சயம் வெற்றி பெறுவர்.
மக்கள் தீர்ப்பு தான் இறுதியானது.
தி.மு.க., ஆட்சியில் விலைவாசி உயர்வு, சட்டம் - ஒழுங்கு சீர்குலைவு ஏற்பட்டுள்ளது. எந்த புதிய திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.,க்கள் 38 பேர் இருந்தும், பார்லிமென்டில் தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற, நிதியுதவி பெற அழுத்தம் கொடுக்கவில்லை. தமிழகத்திற்கு எந்த பயனும் கிடையாது.
கடந்த 2014ல் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. தேர்வு செய்யப்பட்ட எம்.பி.,க்கள், காவிரி பிரச்னைக்காக, 22 நாட்கள் பார்லிமென்டை ஒத்தி வைக்கும் வகையில் அழுத்தம் கொடுத்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வைத்தனர்.
இம்முறை வெற்றி பெற்றால், தமிழகத்திற்கு தேவையான திட்டங்களைப் பெறுவோம். தமிழகத்தின் உரிமைகளை பெறுவோம். அது எங்கள் லட்சியம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அ.தி.மு.க.,வில் தே.மு.தி.க., புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., புரட்சி பாரதம், அகில இந்திய பார்வர்டு பிளாக், பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய குடியரசு கட்சி, தமிழ் மாநில முஸ்லிம் லீக், மனிதநேய ஜனநாயக கட்சி, இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி, கிறிஸ்துவ முன்னேற்ற கழகம் மற்றும் சிறிய அமைப்புகள் துணை நிற்கின்றன.
தே.மு.தி.க.,வுக்கு ஐந்து தொகுதிகள், புதிய தமிழகம் கட்சிக்கு தென்காசி -- தனி தொகுதியும், எஸ்.டி.பி.ஐ., கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி, புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி, எஸ்.டி.பி.ஐ.,யின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

