எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்
எங்களுக்கு வேஷம் போட தெரியாது: ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் ஆவேசம்
ADDED : டிச 13, 2025 06:50 AM

சென்னை: ''ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை செயல்படுத்த, முதல்வர் ஸ்டாலின் தயங்குவது ஏன்,'' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பினார்.
வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும்; ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி, ராமதாஸ் ஆதரவு பா.ம.க., சார்பில் நேற்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகே, ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பா.ம.க., கவுரவ தலைவர் ஜி.கே.மணி, செயல் தலைவர் ஸ்ரீ காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது: கர்நாடகா, கேரள மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதேபோல், தமிழகத்திலும் ஏன் செய்யக்கூடாது? அனைத்து சமூகத்துக்கும் இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டால், அந்த பெருமை, முதல்வர் ஸ்டாலினையே சேரும். ஆனால், முதல்வர் ஏன் இதை செய்ய தயங்குகிறார்?
அடுத்த ஆண்டு தேர்தல் நடக்க உள்ளது. இப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்பை அறிவித்து, அதன்படி இட ஒதுக்கீடு கொடுத்தால், அது உங்களுக்கு தான் நன்மை. எனவே, இந்த ஆண்டு இறுதிக்குள், ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக முதல்வர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்; அதன்படி, இட ஒதுக்கீடு வழங்கப்படும் என அறிவிக்க வேண்டும்.
பா.ம.க., என்றால் ஒரே கட்சி தான். அது, இது என ஏதாவது சொல்லி ஏமாற்றுவர். ஆனால், மக்கள் ஏமாற மாட்டார்கள். எங்களுக்கு வேஷம் போடத் தெரியாது. இவ்வாறு அவர் பேசினார்.
ஸ்ரீ காந்தி பேசுகையில், ''பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் தான் நம் ஒரே தலைவர். மாறாக, நான் தான் தலைவர், நான் தான் தலைவி என கூறி, 100 நாட்கள் சொகுசு பயணம் புறப்படுபவர்கள் மத்தியில், கிராமங்கள்தோறும் நடந்தே சென்று கட்சியை வளர்த்தவர் ராமதாஸ்.
''அவரை மறந்துவிட்டு, இப்போது கட்சியை பிளவுபடுத்தி வருகின்றனர். கட்சியை உருவாக்கியபோது சீனில் இல்லாதவர்கள், இப்போது நாங்கள் தான் கட்சி என்று 'சீன்' போடுகின்றனர்,'' என்றார்.

