மணல் திருட்டை தடுத்து வருகிறோம் தீர்ப்பாயத்தில் கரூர் கலெக்டர் அறிக்கை
மணல் திருட்டை தடுத்து வருகிறோம் தீர்ப்பாயத்தில் கரூர் கலெக்டர் அறிக்கை
ADDED : நவ 28, 2025 07:03 AM

சென்னை : 'கரூர் மாவட்டத்தில், மணல் திருட்டை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. கடந்த ஐந்து மாதங்களில், 67 லாரிகள், டிப்பர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என, தென் மண்டல பசுமை தீர்ப்பாயத்தில், கரூர் கலெக்டர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கரூர் மாவட்டத்தின் சில பகுதிகளில் மணல் குவாரிகள் மூடப்பட்டன. ஆனாலும், இரவு 11:00 மணி முதல் அதிகாலை 5:00 மணி வரை, காவிரி ஆற்றில் சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுகிறது என, பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
மறவப்பாளையம், ஏழாம்பாளையம், மேட்டுப்பாளையம், நெரூர் போன்ற கிராமங்களில், அதிக அளவு மணல் கடத்தப்படுகிறது.
இதனால் நிலத்தடி நீர் குறைந்து பாதிப்பு ஏற்படுகிறது என, கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாளிதழ்களில் செய்தி வெளியானது.
அதன் அடிப்படையில், தாமாக முன்வந்து வழக்கு பதிந்து விசாரித்து வரும் தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி, கரூர் கலெக்டர் தாக்கல் செய்த அறிக்கை:
கரூர் மாவட்டத்தில், காவிரி ஆற்றில், சட்ட விரோதமாக மணல் அள்ளப்படுவதை தடுக்க, சோதனைச்சாவடிகள், சாலை தடுப்புகள், வேலி உள்ளிட்டவை அமைத்து, புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அதிகாலையில் மணல் திருட்டை தடுக்க, ஆர்.டி.ஓ., தலைமையில் சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. காவிரி ஆற்றுப் படுகையில் நுழையும் பாதைகளில், ஆழமான அகழிகள், வாகனம் செல்ல முடியாத அளவுக்கு தடுப்புகள் அமைக்கப் பட்டுள்ளன.
வருவாய் ஆய்வாளர் குழுக்கள், 24 மணி நேரமும் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஜூன் 5 முதல் இதுவரை, மணல் கடத்த பயன்படுத்தப்பட்ட லாரிகள், டிப்பர்கள் உள்ளிட்ட 67 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

