தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி உள்ளோம்: பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை ஒதுக்க வலியுறுத்தி உள்ளோம்: பார்வர்டு பிளாக் மாநில பொதுச்செயலாளர் பேட்டி
ADDED : மார் 10, 2024 11:32 PM
தேனி : ''அ.தி.மு.க., கூட்டணியில் தேனி, ராமநாதபுரம் தொகுதிகள் ஒதுக்க வலியுறுத்தி உள்ளோம்,'' என, தேனியில் நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில பொது செலாளர் கதிரவன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: கட்சியின் மாநில குழு கூட்டம் ஜனவரியில் மதுரையில் நடந்தது. இதில் தேசிய பொது செயலாளர் தேவராஜன் தவிர மற்ற 12 பேர் பங்கேற்றனர். இதில் அக்., 2023ல் அறிவிக்கப்பட்ட மாநில பொறுப்பாளர்கள் பெயர்கள் தள்ளுபடி செய்யப்படுவதாகவும், நான் பொதுச்செயலாளர் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒருவர் 3 முறை அல்லது 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருக்கலாம் என கட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேற்குவங்க தலைநகரில் நடந்த கூட்டத்தில் தமிழகத்தில் என் தலைமையில் கூட்டணி பேச்சுவார்த்தை எனவும் அறிவிக்கப்பட்டது.
தற்போது அ.தி.மு.க., கூட்டணியில் தேனி, ராமநாதபுரம் தொகுதிகளை கேட்டுள்ளோம். உசிலம்பட்டியில் கட்சி வெற்றி பெற்றுள்ளது. தேனி ஒதுக்கப்பட்டால் நான் போட்டியிடுவேன். பார்வர்டு பிளாக் தேசிய அளவில் இண்டியா கூட்டணியில் உள்ளது. எங்கள் செயல்பாடு பா.ஜ.,விற்கு எதிரானது தான். எனவே தான் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.
கேரள, மேற்கு வங்கத்தில் இண்டியா கூட்டணியில் இருக்கும் கட்சிகள் தனித்து நிற்கின்றன. தமிழகம், புதுச்சேரியில் போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது. தி.மு.க.,வை சேர்ந்த ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருள் விற்ற வழக்கில் கைதாகியுள்ளார். அ.தி.மு.க., வன்னியருக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்தது தவறு எனில் அதனை அரசாணையாக தி.மு.க., அறிவித்ததும் தவறு தான் என்றார்.

