ADDED : மார் 19, 2024 07:20 AM

ராணிப்பேட்டை, ஏரி தெருவில் சர்ச் உள்ளது. இதை பாதிரியார் ரகுராஜ்குமார், 54, என்பவர் நிர்வகிக்கிறார். 10ம் வகுப்பு படிக்கும், 14 வயது மாணவி, வாரந்தோறும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து செல்வது வழக்கம்.
கடந்த, 2022 டிசம்பரில் வந்த அவரிடம், பாதிரியார் ரகுராஜ்குமார், பாலியல் சில்மிஷம் செய்தார். இதை யாரிடமும் சொல்லக்கூடாது என மிரட்டியும் வந்ததாக கூறப்படுகிறது. அந்த தகவலை மாணவி, சமீபத்தில் தன் பெற்றோரிடம் தெரிவித்தார்.
மாணவியின் பெற்றோர் புகார்படி, ராணிப்பேட்டை அனைத்து மகளிர் போலீசார், பாதிரியார் ரகுராஜ்குமார் மீது நேற்று முன்தினம் போக்சோவில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 20 ஆண்டு சிறை
திருச்சி, சுப்பிரமணியபுரம் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஜான் மேக்சின், 40. இவர், 2018ம் ஆண்டு, அதே பகுதியைச் சேர்ந்த, 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமியின் பெற்றோர், போலீசில் புகார் அளித்தனர். அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' சட்டத்தில் ஜான் மேக்சினை கைது செய்தனர்.
திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீவத்சன் வழக்கை விசாரித்து, சிறுமியை பலாத்காரம் செய்த ஜான் மேக்சினுக்கு, 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10,000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவையில் நேற்று மாலை நடைபெற்ற, 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார். அதற்காக கோவை அவிநாசி ரோட்டில் உள்ள பள்ளிகள் மற்றும் ஆர்.எஸ்.புரத்தில் உள்ள பள்ளிகளுக்கு, மதியத்திற்கு மேல் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று மதியம் போலீஸ் அவசர எண், 100க்கு ஓர் அழைப்பு வந்தது.
அதில் பேசிய மர்ம நபர் கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், சிறிது நேரத்தில் வெடிக்க உள்ளதாகவும் கூறி, அழைப்பை துண்டித்து உள்ளார்.
அதிர்ச்சி அடைந்த போலீசார், வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அந்த பள்ளிக்கு விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அதில், வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிந்தது. போலீசார் நிம்மதி அடைந்தனர்.
வெடிகுண்டு மிரட்டல் தகவல் கிடைத்ததும், மாணவர்களின் பெற்றோர் குழந்தைகளை அழைத்து செல்ல முயன்றனர். அவர்களிடம் பள்ளி நிர்வாகம், வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று விளக்கம் அளித்தது. அதன் பின், அவர்கள் கலைந்தனர்.
ரூ.10 லட்சம் கையாடல்; 4 பேர் கைது
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நல்லாக்கவுண்டன்நகர் சிவாஜி பஸ் ஸ்டாண்ட் அருகே டீ கடை நடத்துகிறார். இங்கு திண்டுக்கல் விஜயகுமார், பண்ணைப்பட்டி முத்து, மல்லையன், ஒட்டன்சத்திரம் செல்லபாண்டியன், வேடசந்துார் சக்திவேல் சில ஆண்டுகளாக வேலை செய்தனர்.
கடையில் பழுதான கண்காணிப்பு கேமராவை சரி செய்த போது மேற்கண்ட 5 பேரும் கல்லாப்பெட்டியில் இருந்து பணம் கையாடல் செய்தது பதிவாகி இருந்தது. சிறிது சிறிதாக ரூ.10 லட்சம் வரை கையாடல் செய்துள்ளனர். விஜயகுமார், மல்லையன், செல்லபாண்டியன், சக்திவேலை போலீசார் கைது செய்தனர். முத்துவை தேடிவருகின்றனர்.
தொழிலாளி வெட்டிக்கொலை
சிவகாசி தாலுகா அருணாசலபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர் நேற்றிரவு 7:00 மணியளவில் தனது கிராமத்திற்கு டூவீலரில் சென்றுள்ளார். அப்போது வழிமறித்த மர்ம கும்பல் சராமாரியாக வெட்டியதில் இவர் சம்பவ இடத்திலேயே பலியானார். சம்பவ இடத்தை விருதுநகர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா, ஸ்ரீவில்லிபுத்தூர் டி.எஸ்.பி. முகேஷ் ஜெயகுமார் பார்வையிட்டனர். கொலைக்கான காரணம் குறித்து மல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.
பானிபூரி சாப்பிட்ட சிறுவன் பலி
கர்நாடக மாநிலம், தாவணகெரே மாவட்டம், ஹரிஹராவின் மலேபென்னுாரில் உள்ள ஜாமியா மசூதி அருகில் கடந்த 14ம் தேதி மாலை தொழுகை முடித்து, முஸ்லிம்கள் உணவு சாப்பிடச் சென்றனர். அவர்களுடன் வந்த சிறார்கள் சிலர், அப்பகுதி தள்ளுவண்டியில் விற்கப்பட்ட பானிபூரியை வாங்கி சாப்பிட்டுள்ளனர்.
இதில், ஹஸ்ரத் பிலாலின் மகன் இர்பான், 6, என்ற சிறுவனுக்கு 15ம் தேதி அதிகாலை 2:00 மணியளவில் வாந்தி, பேதி ஏற்பட்டுள்ளது. உடனடியாக அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதேபோல, பானிபூரி சாப்பிட்ட மேலும் 19 சிறார்கள், வாந்தி, பேதி, வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவசர சிகிச்சை பிரிவில் சிறுவன் இர்பானுக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்தும் முன்னேற்றம் ஏற்படாததால், தனியார் மருத்துவமனைக்கு பெற்றோர் அழைத்து சென்றனர். ஆயினும், சிகிச்சை பலனின்றி இர்பான் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தான். மருத்துவமனையில் சிகிச்சை பெறும் குழந்தைகளில் நான்கு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

