விஜயதரணி எம்.எல்.ஏ., பதவி பறிக்க சபாநாயகருக்கு கடிதம்
விஜயதரணி எம்.எல்.ஏ., பதவி பறிக்க சபாநாயகருக்கு கடிதம்
ADDED : பிப் 25, 2024 01:08 AM
சென்னை:'பா.ஜ.,வில் சேர்ந்த, எம்.எல்.ஏ., விஜயதரணியை தகுதி நீக்கம் செய்து அறிவிக்கும்படி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது' என, தமிழக காங்., தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைந்தார்
தமிழக காங்., தரப்பில் வெளியான அறிக்கை:
காங்கிரஸ் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட, விளவங்கோடு எம்.எல்.ஏ., விஜயதரணி, நேற்று பா.ஜ.,வில் இணைந்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அனுப்பி உள்ளார்.
கட்சித் தாவல் தடை சட்டத்தின்படி, ஒரு அரசியல் கட்சியின் எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள், தாங்கள் சார்ந்திருக்கும் கட்சியிலிருந்து விலகி, வேறு அரசியல் கட்சிக்கு தாவினால், அவர்களின் பதவி பறிக்கப்பட்டுவிடும்.
இந்த விதியின் அடிப்படையில், விஜயதரணி எம்.எல்.ஏ., பதவியை, உடனடியாக தகுதி நீக்கம் செய்து அறிவிக்குமாறு, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பப்பட்டு உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பச்சை துரோகம்
தமிழக காங்கிரஸ் கமிட்டி சட்டசபை குழு தலைவர் ராஜேஷ்குமார் கூறியதாவது:
காங்கிரசில் பெண் என்ற அடிப்படையில் விஜயதரணிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. முகவரி கொடுத்த காங்கிரஸ் கட்சிக்கு பச்சை துரோகம் இழைத்து விட்டார். சுயநலத்தோடு பா.ஜ.,வில் இணைந்துள்ளார். காங்கிரசின் கொள்கை வேறு; பா.ஜ.,வின் கொள்கை வேறு. எனவே இது மோசமான செயலாகும். அவருக்கு கன்னியாகுமரி மக்கள் தகுந்த பாடம் புகட்டுவர்.
கன்னியாகுமரியில் விஜயதரணி போட்டியிட்டால் டெபாசிட் பெற முடியாத அளவு செய்வோம். அவர் வெளியேறியதால்எங்களுக்கு பாதிப்பு கிடையாது.
இவ்வாறு ராஜேஷ்குமார் கூறினார்.

