விஜய் கட்சிக் கொடி: உண்மை விளக்கம் எப்படி? உலா வரும் தகவல்கள்
விஜய் கட்சிக் கொடி: உண்மை விளக்கம் எப்படி? உலா வரும் தகவல்கள்
ADDED : ஆக 27, 2024 11:55 AM

சென்னை: நடிகர் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியை துவக்கி, அதற்கான கொடி மற்றும் பாடலை கடந்த ஆக.,22ம் தேதி அறிமுகப்படுத்தினார். கொடியில் சிவப்பு - மஞ்சள் - சிவப்பு நிறங்களில் இரட்டை போர் யானைகளும், நடுவே வாகை மலரும் இடம்பெற்றிருந்தது. இதற்கு கட்சியின் முதல் மாநில மாநாட்டின்போது விரிவான விளக்கத்தை அளிப்பதாக விஜய் கூறினார். அதற்கு முன்னதாகவே பலரும் பலதரப்பட்ட விளக்கங்களை அளித்து வருகின்றனர். அதேநேரத்தில் விமர்சனங்களையும் கொட்டி தீர்க்கின்றனர்.
விமர்சனங்கள் என்னென்ன?
* போர் யானைகளாக இருக்கும் இரண்டுக்கும் காதுகள் பெரிதாக உள்ளன. இந்த யானைகள் இந்தியாவைச் சேர்ந்தவை அல்ல, ஆப்ரிக்காவைச் சேர்ந்தவை.
* பகுஜன் சமாஜ் கட்சியின் கொடி மற்றும் அந்தக்கட்சியின் சின்னமான ஒற்றை யானையை பிரதிபலிப்பதாக கட்சி கொடி உள்ளது என்று அக்கட்சியின் மாநில தலைமை புகார் கூறியுள்ளது.
* கொடியில் உள்ள இரட்டை யானைகள் கேரள அரசின் போக்குவரத்து கழகம், சில தனியார் நிறுவனங்கள் போன்றவற்றின் லோகோ போல் உள்ளது.
* கொடியில் உள்ள சிவப்பு - மஞ்சள் - சிவப்பு வண்ணங்களைப் போன்று ஸ்பெயின் நாட்டு கொடியும் இருக்கிறது.
* கொடியில் உள்ள சிவப்பு - மஞ்சள் - சிவப்பு வண்ணங்கள் எங்கள் கொடியில் உள்ள வண்ணங்கள் போல உள்ளது என வெள்ளாளர் முன்னேற்ற கழகம் விமர்சிக்கிறது.
* கொடியின் நடுவில் உள்ள இளஞ்சிவப்பு வாகை மலர், உண்மையான வாகை மலரல்ல; அது தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தூங்கு மூஞ்சி மரத்தின் பூ என்றும், உண்மையான வாகை மலர் இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறது.
* கொடியில் உள்ள 28 நட்சத்திரங்களும் பல்வேறு கோணத்தில் விமர்சிக்கப்படுகிறது. 28 நட்சத்திரங்களும் இந்தியாவின் 28 மாநிலங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக கருத்துகள் எழுந்தன. 28 நட்சத்திரங்களில் 23 நட்சத்திரங்கள் பச்சை வண்ணத்தில் இருப்பது வடமாநிலங்களையும், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்தில் இருப்பது தென்மாநிலங்களையும் குறிப்பிட்டிருப்பதாக கருத்துகள் எழுந்தன.
- இவ்வாறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.
விளக்கங்கள்
இதற்கு தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சிலர், சமூக வலைதளங்களில் கொடி பற்றிய சில விளக்கங்களை பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில....
* தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் இல்லாத வகையில் கம்பீரமான வகையில் உள்ள கட்சி கொடி, சிறுவர்கள், பெண்கள், இளைஞர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.
* வாகை, வெற்றி ஆகியவை கட்சியின் தலைவரையே குறிக்கும் அடையாளம். வாகை, வெற்றி, விஜய் ஆகிய மூன்றும் ஒரே அர்த்தத்தை குறிக்கும்.
* இளஞ்சிவப்பு வாகை மலர், வெற்றி மலர் மட்டுமல்ல, பெண்களை குறிக்கும் மலராக அமைந்துள்ளது.
* போர் யானைகள் என்பது பலம் மற்றும் போர் வெற்றியின் அடையாளம். யானைப் படை வைத்திருந்த மன்னர்கள் போர்க்களத்தில் எளிதாக வெல்லும் திறன் வாய்ந்தவர்களாக விளங்கினார்கள். தமிழ் மன்னர்கள் தான் போர்க்களத்தில் யானைப் படைகளை பயன்படுத்தி, எதிரிகளை வீழ்த்தினர்.
* போர் யானைகள், வீரமிக்க ஆண் வர்க்கத்தை குறிக்கும். யானைகள் தமிழர்களோடும், தமிழர் பண்பாட்டு கலாசாரத்தோடும் தொடர்புடையவை. தமிழகத்தின் மிகப்பெரிய கோவில்களில் பெரிய அளவில் யானைச் சிற்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
* கொடியில் 23 நட்சத்திரங்கள் பச்சை வண்ணத்தில் உள்ளன. பச்சை என்பது விவசாயத்தையும், இஸ்லாமையும் குறிக்கிறது.
* கொடியில் 5 நட்சத்திரங்கள் நீலம் வண்ணத்தில் உள்ளன. நீலம் என்பது நீலப்புரட்சியின் அடையாளம். நீலப் புரட்சி என்பது கடல் மீன் வளர்ப்பு மற்றும் உள்நாட்டு மீன் வளர்ப்பின் உற்பத்தித் திறனை அதிகரித்து மீனவர்களின் பொருளாதார வாழ்வாதாரத்தை உயர்த்துவது. மேலும், நீலம் பட்டியலின சமூகங்களின் அடையாள நிறத்தையும் குறிக்கும்.
* கொடியில் உள்ள மஞ்சள் வண்ணம் மங்களகரமானது மட்டுமின்றி பெண்கள் விரும்பும் வண்ணமாகும். சித்த மருத்துவத்திலும், வழிபாடுகளிலும் மஞ்சளுக்கு சிறப்பான இடமுண்டு.
* கொடியில் உள்ள சிவப்பு வண்ணம், புரட்சி மற்றும் உழைக்கும் வர்க்கத்தை குறிக்கும். தொழிற்சங்கத்தினரின் பிரதான வண்ணமாக சிவப்பு உள்ளது.
இதுவரை கட்சி தரப்பில் அதிகாரப்பூர்வ விளக்கங்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும், இதனையே மாநாட்டின்போது விஜய் தரப்பில் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

