குழப்பத்தில் இருக்கிறார் விஜய்; அவர் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை: எல்.முருகன் பாய்ச்சல்
குழப்பத்தில் இருக்கிறார் விஜய்; அவர் தெளிவான பாதையை தேர்ந்தெடுக்கவில்லை: எல்.முருகன் பாய்ச்சல்
UPDATED : அக் 29, 2024 02:56 PM
ADDED : அக் 29, 2024 02:48 PM

சென்னை: 'விஜய் தெளிவான பாதையைத் தேர்வு செய்யவோ, பயணிக்கவோ விரும்ப வில்லை;அவர் குழப்பத்தில் உள்ளார்' என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் எல். முருகன் கூறியதாவது: விஜய் தெளிவான பாதையைத் தேர்வு செய்யவோ, பயணிக்கவோ விரும்பவில்லை. குழப்பத்தில் உள்ளார் என்பதை அவரது கொள்கைகள் காட்டுகின்றன. தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என்றிருந்தால் வரவேற்றிருப்போம்; திராவிடம், தமிழ்த் தேசியம், இருமொழிக் கொள்கை என முரண்பட்டுள்ளார். திராவிடம், தமிழ் தேசம் ஒன்று என்று இருக்கிறார்கள். இருந்தாலும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் அவருக்கு மனதார தெரிவித்து கொள்கிறேன்.
கொள்கை, கோட்பாடு
நமது நாடு தான் உலகத்திலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு. மிகப்பெரிய ஜனநாயக நாட்டில், அவர் கட்சி ஆரம்பித்துள்ளார். அவரது செயல்பாடுகள் போக, போக தான் தெரியும். ஆனால் அவர் கொள்கை, கோட்பாடுகள் அறிவித்ததில் இருந்து, அவர் தெளிவான பாதையை தேர்ந்து எடுக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. தி.மு.க., நடத்துவது போலி திராவிட மாடல் ஆட்சி; அதனால் தான் அக்கட்சியை அதிகம் தாக்கிப் பேசியுள்ளார். ஆட்சியில் பங்கு கோரி, கட்சி தலைமை உத்தரவிடாமல், காங்கிரஸ் நிர்வாகி கடிதம் எழுத முடியுமா? இவ்வாறு எல்.முருகன் கூறினார்.

