தி.மு.க.,வை மட்டும் விமர்சித்த விஜய்; அ.தி.மு.க., ஓட்டுகளை பெற அதிரடி வியூகம்
தி.மு.க.,வை மட்டும் விமர்சித்த விஜய்; அ.தி.மு.க., ஓட்டுகளை பெற அதிரடி வியூகம்
UPDATED : டிச 19, 2025 02:11 AM
ADDED : டிச 19, 2025 02:09 AM

சென்னை: ஈரோட்டில் நடந்த பிரசார கூட்டத்தில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று பேசினார்.
அதில், அ.தி.மு.க., மற்றும் பா.ஜ., கூட்டணியை விஜய் விமர்சிக்கவில்லை; தி.மு.க.,வை மட்டுமே கடுமையாக விமர்சித்தார். எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா கூறியது போல, தீய சக்தி என்று தி.மு.க.,வை விஜய் கடுமையாக சாடினார்.
அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்., ஆகியோரை யாரும் உரிமை கொண்டாட முடியாது; இரண்டு தலைவர்களும், அனைவருக்கும் பொதுவானவர்கள் என விஜய் உரிமை கொண்டாடினார். ஜெயலலிதாவையும் பெருமைப்படுத்தும் வகையில் பேசினார். அ.தி.மு.க.,வின் மொத்த ஓட்டுகளையும் தன் பக்கம் வளைக்கும் நோக்கிலேயே அவர் அப்படி பேசியதாக பலரும் கூறுகின்றனர்.
மேலும், 'களத்தில் இருப்பவர்களை மட்டுமே எதிர்த்து அரசியல் செய்ய முடியும்; களத்தில் இல்லாதவர்களையும், களத்துக்கு சம்பந்தம் இல்லாதவர்களையும் எதிர்க்க முடியாது' என்றார்.
இப்படி பேசியதன் வாயிலாக, 'தி.மு.க., - த.வெ.க., இடையில் தான் போட்டி; மற்ற கட்சிகள் களத்தில் இல்லை' என மறைமுகமாக விஜய் தெரிவித்துள்ளார்.
கொங்கு மண்டல மக்களின் ஓட்டுகளை கவர, காளிங்கராயனை பெருமைப்படுத்தும் வகையில் விஜய் பேசினார். அவரது பேச்சுக்கு, தி.மு.க.,வினர் உடனுக்குடன் பதிலடி தந்த நிலையில், அ.தி.மு.க.,வினர் வழக்கம் போல அடக்கி வாசிக்கின்றனர்.

