ADDED : மார் 08, 2024 10:41 PM
கோவை விமான நிலையத்தில் அண்ணாமலை அளித்த பேட்டி:
கொங்கு மண்டலத்தின் முதன்மையான கட்சியாக பா.ஜ., வளர்ந்துள்ளது. கோவை, பொள்ளாச்சி, ஈரோடு உள்ளிட்ட கொங்கு மண்டலத்தில், அனைத்து தொகுதியிலும் பா.ஜ., வெற்றி பெறும் என, எழுதித்தர தயாராக உள்ளேன்.
பா.ஜ.,வுக்கு போடும் ஓட்டு, வளர்ச்சிக்கான ஓட்டு என்பதை மக்கள் புரிந்துள்ளனர். பன்னீர்செல்வம், தினகரன் உள்ளிட்ட பல தரப்பினருடனும், தேர்தல் கூட்டணி குறித்த பேச்சு நடந்து வருகிறது. சரியான நேரத்தில் தமிழகத்தில் கூட்டணி குறித்து அறிவிக்கப்படும்.
கோவையில் மட்டுமின்றி, பல்வேறு தொகுதிகளிலும் நான் போட்டியிட வேண்டும் என, கட்சி நிர்வாகிகள் ஆசைப்படுகின்றனர். எனக்கு வேலைப்பளு அதிகம்; சில சங்கடங்களும் இருக்கின்றன. அதனால், தேசிய தலைமை சொல்வதற்கு மட்டுமே நான் கட்டுப்படுவேன்.
தேர்தல் பத்திரம் என்பது, கருப்பு பணம் கைமாறுவதை தடுப்பதற்கான ஒரு வழிமுறை; அதை தவிர்க்க முடியாது.
இந்தியாவிலேயே தேர்தல் பத்திரம் வாயிலாக, அதிக பணம் பெற்றுள்ள மாநில கட்சி தி.மு.க., தான். தமிழகத்தில், பொதுக்கூட்டம் உள்ளிட்ட எல்லா செலவுகளுக்கும், காசோலை வாயிலாக பணம் கொடுத்து, வெளிப்படைத்தன்மையுடன் இருப்பது பா.ஜ., மட்டுமே.
நான் வெளியிட்ட 2ஜி ஆடியோவை, ஆ.ராஜா மறுத்தால், நான் அரசியலை விட்டே விலகி விடுகிறேன். நம் பிரதமரை பற்றி, ராஜா பேசியதை பார்த்து மக்கள் சிரிக்கின்றனர். பிரதமரை பற்றி பேச அவருக்கு எந்த விதமான தார்மீக தகுதியும் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

