துணை ஜனாதிபதிக்கு 2ம் தேதி சென்னையில் பாராட்டு விழா!
துணை ஜனாதிபதிக்கு 2ம் தேதி சென்னையில் பாராட்டு விழா!
ADDED : டிச 29, 2025 09:32 PM

சென்னை: துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, சென்னை கலைவாணர் அரங்கில், வரும், 2ம் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது. இதில், பா.ஜ., - அ.தி.மு.க., மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.
நாட்டின் துணை ஜனாதிபதியாக இருந்த ஜெகதீப் தன்கர், கடந்த ஜூலை மாதம், தன் பதவியை ராஜினாமா செய்தார். புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்வதற்காக நடந்த தேர்தலில், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட, தமிழகத்தை சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார்.
இவர், ஏற்கனவே தமிழக பா.ஜ., தலைவராக இருந்தவர். துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், முதல் முறையாக அக்டோபர் இறுதியில் கோவை வந்தார். அங்கு அவருக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது.
வரும், 2ம் தேதி சி.பி.ராதாகிருஷ்ணன் சென்னை வருகிறார். துணை ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின், முதல் முறையாக சென்னை வரும் அவருக்கு, சேப்பாக்கம் கலைவாணர் அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
இதில், தமிழக பா.ஜ., - அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்க உள்ளனர்.

