UPDATED : பிப் 07, 2024 04:26 AM
ADDED : பிப் 06, 2024 11:06 PM

புதுக்கோட்டை:''வேங்கை வயல் விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்,'' என, தேசிய பட்டியல் இன ஆணைய இயக்குனர் ரவிவர்மன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக, பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்த, தேசிய பட்டியலின ஆணைய இயக்குனர் ரவிவர்மன், விசாரணை எவ்வாறு நடைபெறுகிறது என கேட்டறிந்தார்.
பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
வேங்கைவயல் விவகாரத்தில் சி.பி.ஐ.,க்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் கூறுகின்றனர்.
ஆணையம், சி.பி.ஐ., விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று அறிக்கையை, ஆணையத் தலைவருக்கு சமர்ப்பிக்கும்.
ஆணைய தலைவர் இது குறித்து முடிவெடுப்பார். சி.பி.சி.ஐ.டி., போலீசார் மனிதக் கழிவுகள் கலந்த நீரை சாம்பிள் எடுத்த விதம் தவறு. இதேபோல, டி.என்.ஏ., ரத்த மாதிரி பரிசோதனையும் எடுத்தது தவறு.
உண்மை கண்டறியும் சோதனை மட்டுமே இதற்கு தீர்வாகும். சி.பி.சி.ஐ.டி., போலீசார் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவதற்கு அனுமதி கேட்டுள்ளது வரவேற்கத்தக்கது.
பாதிக்கப்பட்ட மக்களை மட்டுமே குறிவைத்து இந்த விசாரணை யானது நடைபெற்று வருவதாக ஆணையம் கருதுகிறது.
தமிழகத்தில் தொடர்ந்து பட்டியல் இன மக்கள் மீது தாக்குதல் என்பது நடைபெற்று வருகிறது. இந்த புகார் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்தால் மட்டுமே இது போன்ற செயல்களை தடுக்க முடியும்.
வழக்கு பதிவு செய்வதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் போராட வேண்டிய நிலை உள்ளது.
சம்பவம் நடைபெற்ற போது, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் மனித கழிவுகள் கலந்தநீரை மாதிரி பரிசோதனைக்கு எடுத்ததாக கூறுகின்றனர். ஆனால் அதிக அளவு நீரில் கழிவு கலந்ததால் சோதனை முடிவு சரியாக இருக்காது.
விரைவில் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு கூறினார்.

