ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு திமிர் பேச்சு
ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்: வன்னி அரசு திமிர் பேச்சு
UPDATED : ஆக 25, 2025 06:19 AM
ADDED : ஆக 24, 2025 10:55 PM

சென்னை: 'ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டும்' என்று விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் வன்னி அரசு பேசி இருக்கிறார்.
ஆணவக் கொலைகளுக்கு எதிரான சமூகநீதி கருத்தரங்கம் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் விடுதலை சிறுத்தைகள் துணை பொதுச் செயலாளர் கலந்து கொண்டார்.
அவர் பேசியதாவது;
வாள் எடுத்து ராமன் காட்டுக்கு போகும் போது அங்கே ஒருவன் தலைகீழாக தொங்கிக் கொண்டு இருக்கிறான். அப்போது சென்ற ராமன் நீ என்ன செய்து கொண்டு இருக்கிறாய் என்று கேட்கிறான்.
நான் தவம் செய்து கொண்டிருக்கிறேன் என்கிறான். உன்னுடைய பெயர் என்று ராமன் கேட்கும் போது சம்பூகன் என்று அவன் பதில் சொல்கிறான்.
உன்னுடைய சாதி என்ன என்று கேட்கிறான். நான் வேட்டுவ சமூகம் என்று சம்பூகன் கூறுகிறான். அதாவது பழங்குடி சமூகம் என்று சொல்கிறான். கீழ்ஜாதியான நீ எப்படி ஜாதி மாறி இந்த தர்மத்தை செய்ய முடியும்? அந்தந்த ஜாதிக்கு என்று தர்மம் இருக்கிறது என்று சொல்லி, வாள் எடுத்து அவன் தலையை வெட்டி படுகொலையை செய்கிறான்.
அந்த ரத்தம் குழந்தையின் மீது தெறித்தபிறகு, அந்த குழந்தை உயிர்ப்பித்ததாக கதையில் சொல்லப்படுகிறது. இந்த கொலைகளுக்கு பின்னாடி, ஆணவக் கொலைகளுக்கு பின்னணியில் ஒரு கோட்பாடு இருக்கிறது.
அந்த கோட்பாடு தான் சனாதன கோட்பாடு. அந்த கோட்பாடு தான் வர்ணாசிரம கோட்பாடு. அந்த கோட்பாட்டை அழித்தொழிக்க வேண்டும். அதைதான் அம்பேத்கர் சொன்னார்.
ஹிந்து மதம் அழிக்கப்பட வேண்டிய மதம். ஹிந்து மதத்தில் சமத்துவம் இல்லை. ஹிந்து மதத்தில் எப்போதுமே சமூகநீதி இல்லை. ஆகவே தான் ஹிந்து மதத்திற்கு எதிராக அவர்(அம்பேத்கர்) மதம் மாறுகிறார்.
இந்த படுகொலை எங்கிருந்து தொடங்குகிறது. இந்த கோட்பாட்டை, வர்ணாசிரமத்தை எங்கிருந்து தொடங்க வேண்டும் என்பது அவர்களின் நுட்பமான அரசியல்.
ராமன் பார்ப்பனர் அல்ல. ஆனால் பார்ப்பனர்களுக்காக அந்த படுகொலையை (சம்பூகனை கொல்வது) செய்கிறார்.
ரெண்டும் ஒன்றுதான், ராமனும் ஒன்றுதான், ராமதாசும் ஒன்றுதான். நான் இதை கருத்தியல் ரீதியாக சொல்கிறேன். ராமன் பார்ப்பனர் அல்ல, ஆனால் பார்ப்பனர்களுக்காக அந்த படுகொலையைச் செய்கிறான்.
மருத்துவர் ராமதாஸ் பார்ப்பனர் அல்ல. ஆனால் பார்ப்பனர்களின் இந்த கருத்தியலை நடைமுறைப்படுத்தவதற்காக இந்த வேலையை செய்கிறார்கள். வெறும் ராமதாசோடு இதை நான் முடிக்கவில்லை.
அதனுடைய தொடர்ச்சி இன்று நிறைய இருப்பதால் அந்த கருத்தியலை உள்வாங்கிக் கொள்கிறார்கள்.
இவ்வாறு வன்னி அரசு பேசினார்.