துணை பொது செயலருடன் வைகோ மகன்... சமரசம் : ம.தி.மு.க.,வில் அமலுக்கு வந்த போர் நிறுத்தம்
துணை பொது செயலருடன் வைகோ மகன்... சமரசம் : ம.தி.மு.க.,வில் அமலுக்கு வந்த போர் நிறுத்தம்
UPDATED : ஏப் 21, 2025 10:26 AM
ADDED : ஏப் 21, 2025 12:12 AM

சென்னை:ம.தி.மு.க., துணை பொதுச்செயலர் மல்லை சத்யாவுடன் மோதல் ஏற்பட்டதால், கட்சியின் பொதுச்செயலர் வைகோவின் மகன் மற்றும் கட்சியின் முதன்மை செயலரான துரை வைகோ, தன் கட்சிப் பதவியை ராஜினாமா செய்தார். இதனால், ம.தி.மு.க.,வில் அடுத்து என்ன நடக்கும் என்ற நிலை உருவான நிலையில், நேற்று இருவருக்கும் இடையே சமரசம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து, ம.தி.மு.க.,வில், போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது, கட்சியினரிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு, கட்சியின் துணை பொதுச்செயலராக உள்ள மல்லை சத்யா உடன் திடீரென மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க, மோதல் வெளிச்சத்திற்கு வந்தது. இரு தினங்களுக்கு முன், துரை வைகோ வெளிப்படையாக, மல்லை சத்யாவை விமர்சித்தார்.
கட்சியில் பிளவு
அதைத் தொடர்ந்து, அவரை கட்சியில் இருந்து நீக்கக்கோரி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதனால், கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாக, கட்சியினர் யாரும் தீர்மானம் நிறைவேற்றக்கூடாது என்று வைகோ உத்தரவிட்டார். அதிருப்தி அடைந்த துரை வைகோ, தன் கட்சி பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று முன்தினம் அறிவித்தார்.
இது, ம.தி.மு.க.,வில் பதற்றத்தை அதிகரித்தது. இந்தச் சூழ்நிலையில், ம.தி.மு.க., நிர்வாக குழு கூட்டம், கட்சியின் அவைத்தலைவர் அர்ஜுன்ராஜ் தலைமையில், சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்தில் பேசிய நிர்வாகிகள், துரை வைகோவின் ராஜினாமாவை ஏற்கக்கூடாது என்று வலியுறுத்தினர்.
மல்லை சத்யாவும் கட்சி உத்தரவுக்கு கட்டுப்படுவதாக தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, துரை வைகோ, மல்லை சத்யா ஆகியோரை, வைகோ அழைத்து பேசி சமாதானப்படுத்தினார்.
அவர் கூறியதை ஏற்று, தன் ராஜினாமாவை திரும்ப பெறுவதாக துரை வைகோ அறிவித்தார். கட்சிக்குள் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இது, கட்சியினருக்கு நிம்மதியை தந்துள்ளது.
கருத்து வேறுபாடு
கூட்டம் முடிந்த பிறகு, வைகோ அளித்த பேட்டி:
மல்லை சத்யா, துரை வைகோ இடையே திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதுகுறித்து பலரும் தங்கள் கற்பனைக்கு ஏற்றவாறு பதிவுகள் போட்டனர். அதை நான் குறை சொல்லவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் இருவரும் மனம் விட்டு பேசினர். 'இனிமேல் இப்படிப்பட்ட பதிவுகள் வராது; அதற்கு நான் ஒரு போதும் இடம் கொடுப்பதில்லை.
'இதை துரை ஏற்க வேண்டும். கட்சி தலைமைக்கும், முதன்மை செயலருக்கும் உறுதுணையாக செயல்படுவேன்' என்று மல்லை சத்யா தெரிவித்தார்.
அதை துரை ஏற்று, 'ஒற்றுமையாக இருந்து கட்சியை வலுப்படுத்துவோம். நடந்தவை நடந்து முடிந்தவையாக இருக்கட்டும். இனி நடப்பது நல்லவையாக இருக்கட்டும்' என்றார்.
இருவரும் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி, கரம் குலுக்கி, இணைந்து பணியாற்றுவோம் என, நிர்வாகக்குழு உறுப்பினர்களிடம் தெரிவித்தனர். பிரச்னை முடிந்தது.
இப்பிரச்னையை வைத்து, தி.மு.க., கூட்டணிக்கு பின்னடைவு ஏற்படுத்த சிலர் நினைத்து ஏமாந்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

