திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி ஈ.வெ.ரா., சிலை முன் தீக்குளித்து தற்கொலை
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரி ஈ.வெ.ரா., சிலை முன் தீக்குளித்து தற்கொலை
UPDATED : டிச 19, 2025 09:57 AM
ADDED : டிச 19, 2025 02:26 AM

மதுரை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றக்கோரியும், தி.மு.க., அரசின் நிலைபாட்டை கண்டித்தும் மருந்து விற்பனை பிரதிநிதி பூர்ணசந்திரன் 40, மதுரை போலீஸ் அவுட்போஸ்ட் பூத்திற்குள் புகுந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். 'தி.மு.க., குடும்பத்தைச் சேர்ந்தவன் என்றாலும் நான் ஹிந்து' என உருக்கமாக ஆடியோவும் வெளியிட்டுள்ளார்.
மதுரை நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியை சேர்ந்தவர் பூர்ணசந்திரன், மருந்து விற்பனை பிரதிநிதியாக இருந்தார். இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனர். பூர்ணசந்திரன் ஓய்வு நேரங்களில் சரக்கு வாகனம் மூலம் காய்கறி, பழவிற்பனையில் ஈடுபட்டு வந்தார். நேற்று மாலை 4:00 மணிக்கு சரக்கு வாகனத்துடன் மதுரை மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள போலீஸ் அவுட்போஸ்ட் சந்திப்பில் உள்ள ஈ.வெ.ரா., சிலை அருகேயுள்ள, ஆளில்லா போலீஸ் பூத்திற்கு சென்று, உள்பக்கமாக பூட்டிக்கொண்டு பெட்ரோலை ஊற்றி தீக்குளித்தார். அலறல் சத்தத்தை கேட்டு அப்பகுதி மக்களும், அவ்வழியே வந்த துணைமேயர் நாகராஜனும் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்குள் பூர்ணசந்திரன் கருகி இறந்தார். தல்லாகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மதுரைக்குதான் பெருமை
தற்கொலைக்கு முன் பூர்ணசந்திரன், வாட்ஸ் ஆப்பில் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: மதுரைக்காரங்க எல்லோருக்கும் திருப்பரங்குன்றத்தில தீபம் ஏற்றுவதில் உடன்பாடில்லை என நிறைய பேர் சொல்லிட்டு இருக்காங்க. அதில் எனக்கு சுத்தமாக நம்பிக்கை இல்லை. திருப்பரங்குன்றம் முருகனின் முதல் படை வீடு. அதில் தீபம் ஏற்றுவதால் மதுரைக்குதான் பெருமையே தவிர, யாருக்கும் பாதகமில்லை. அங்கே தர்கா இருக்கு. அது அமைதியான இடம். அங்கிருந்து 15 மீட்டர் தள்ளி தீபத்துாண் உள்ளது. அதில் தீபம் ஏற்ற வேண்டும் என கோர்ட் சொல்லியுமே அதை தடுக்கிறார்கள். அது ஏனென்று தெரியலை. மதுரைக்கு பெருமை வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.
ஓட்டு அரசியல்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும்போது அதை எங்கிருந்தாலும் பார்க்கலாம். இதன்மூலம் எத்தனை கோடி பக்தர்களுக்கு முருகனின் அருள் கிடைக்கும். தீபம் ஏற்றும் போது மாற்றுத்திறனாளிகள் வெளியே வந்து இறைவனை ஒளி வடிவில் பார்க்க முடியும். அதை ஏன் அரசு தடுக்கிறது. இதனால் தர்காவுக்கு எந்த பாதிப்பும் வராது. என்கூட படித்த இஸ்லாமியர்கள் பலர் உள்ளனர். அப்படி இருக்கும்போது அரசு தடுத்து மதுரையில் இருவேறு மதத்தினர் இடையே கலவரத்தை துாண்டுவதற்காக ஓட்டு அரசியல் பண்றதுக்காக இந்த அரசு நடப்பதாக நான் நினைக்கிறேன்.
நாங்க தி.மு.க., குடும்பம்
எங்க வீட்டில எல்லோரும் தி.மு.க.,தான். எங்கப்பா திருமணத்திற்குகூட கலைஞர் கைப்பட வாழ்த்து செய்தி எழுதி அனுப்பி உள்ளார். இப்படிஇருக்கையில் இந்த விஷயத்தில் மனக் கஷ்டமாக இருக்கு. ஒரு ஹிந்துவாக இருந்து திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதில் அரசுக்கு ஏன் காழ்ப்புணர்ச்சி என தெரியலை. அனைத்து ஹிந்துக்களும் யோசிக்கணும். இவ்வளவு பேர் போராடுகிறார்கள். முருகனின் முதல்படையான திருப்பரங்குன்றத்திற்கு பெருமை சேர்க்க வேண்டும் என ஒரு நீதிபதியே நினைத்து சி.ஆர்.பி.எப்., வீரர்களை அனுப்பி ஏற்றணும் எனச்சொன்னார். ஆனால் மாநில அரசு தடுத்தது.
அரசின் தவறான முடிவு
திருப்பரங்குன்றம் விஷயத்தில் அரசு எடுப்பது தவறான முடிவு. கார்த்திகை தீபத்தை ஏற்ற வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டதை மதிக்காம தமிழக அரசு இவ்வாறு நடந்துக்கொள்வது பெரும்பான்மையாக வாழக்கூடிய ஹிந்து சமயத்திற்கு கொடுமையானதாக கருதுகிறேன். ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில்தான் தடை விதித்திருந்தனர். பல ஆயிரம் ஆண்டுகளாக திருப்பரங்குன்றத்தில் முருகனை வழிபட்டு கொண்டிருக்கிறார்கள். அதற்கு மணிமகுடமாக மலை உச்சியில் தீபம் ஏற்றியிருக்கிறார்கள். ஆனால் 100 ஆண்டுகளாக தீபம் ஏற்றுவது தடைபட்டு மோட்சம் ஏற்றும் இடத்தில் ஏற்றி வருகிறார்கள். இது தவறான விஷயம். இதை அரசு கட்டுப்பாட்டில் உள்ள அறநிலையத்துறைதான் எடுத்து இவ்வழக்கை நடத்தி இருந்தால் ஹிந்து அமைப்புகள் போராட வேண்டிய அவசியம் இல்லை எனக்கருதுகிறேன்.
ஹிந்துக்களுக்கு ஒற்றுமை இல்லை
இதுவே ஒரு பள்ளிவாசலுக்கு நடந்திருந்தால் வக்புவாரியம் கட்டாயம் செயல்படுத்தியிருக்கும். 300 ஆண்டுகள் வரை தடைப்பட்டிருந்தால் கூட அவர்கள் போராடியிருப்பார்கள். அவர்களது ஒற்றுமையை காட்டியிருப்பார்கள். ஆனால் தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள பெரும்பான்மையான ஹிந்து சமயத்தினர் மத எண்ணத்தில் கட்டுக்கோப்பாக இருந்து போராட மாட்டோம் என்கிறோம். அதனால்தான் அரசு இப்படி செயல்படுகிறது.
என் உடல் மீது தீபம் ஏற்றுகிறேன்
இதன்மூலம் நான் தெரிவிப்பது என்னவென்றால், பெரியார் சிலை முன் என் உடல் மீது தீபம் ஏற்றி கடவுள் இல்லை என்று சொன்னவர் முன், கடவுளுக்காக இவ்விஷயம் செய்கிறேன். அந்த நீதிபதிக்கு என் நன்றிகள். 2026ல் தேர்தலுக்கு பின் அடுத்த ஆட்சியிலாவது கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்பதற்காக என் உயிரையும் பொருட்படுத்தாது இவ்வாறு செய்ய உள்ளேன். என்னை நினைத்து என் குடும்பத்தினர் வருத்தப்படுவார்கள். அவர்களுக்கு மனநல டாக்டர்கள் கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். என் குடும்பத்திற்கு என் வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன். என் மனஉளைச்சல் காரணமாகதான் இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இது என் சுய முடிவு. என்னை மன்னித்துக்கொள்ளுங்கள். என் உடம்பில் தீபம் ஏற்றி, பெரியார் சிலை முன் போலீஸ் அவுட்போஸ்டிற்குள் உயிரை தியாகம் செய்கிறேன். ஆன்மிக பூமி மதுரையில் திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை என இரண்டு படை வீடுகள் உள்ளன. அறுபடை வீடுகளில் இரண்டு படை மதுரையில் இருப்பது பெருமை. மீனாட்சி கோயில், அழகர்கோவில் என உள்ள ஆன்மிக பூமியான மதுரையில் ஒரு ஆன்மிக நிகழ்ச்சி நடத்த முடியவில்லையே என மனஉளைச்சலுக்காக என் உடலில் தீபம் ஏற்றி போலீஸ் பூத்திற்குள் உயிரை மாய்த்துக்கொள்ள உள்ளேன். இவ்வாறு வாட்ஸ் அப்பில் தெரிவித்துள்ளார்.

