சபையை சுறுசுறுப்பாக நடத்த முடியவில்லை: அப்பாவு விரக்தி
சபையை சுறுசுறுப்பாக நடத்த முடியவில்லை: அப்பாவு விரக்தி
ADDED : மார் 21, 2025 12:39 AM
சென்னை:சட்டசபையில், பட்ஜெட் மீது 17ம் தேதி முதல் விவாதம் நடந்து வருகிறது. பட்ஜெட் தொடர்பாக எம்.எல்.ஏ.,க்கள் எழுப்பும் கேள்விகளுக்கு, அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
இது மட்டுமின்றி, சபை காலை 9:30 மணிக்கு துவங்கியதும், ஒரு மணி நேரம் கேள்வி நேரம் அனுமதிக்கப்படுகிறது. கேள்வி நேர விவாதம், பகல் 11:00 மணி வரை நீடிக்கிறது. பட்ஜெட் மீதான விவாதம், மாலை 4:00 மணி வரை நடக்கிறது. இதனால், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமின்றி, துறை செயலர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதை குறிப்பிட்டு, சபாநாயகர் அப்பாவு பேசியதாவது:
சபையில் எல்லாரும் துணை கேள்வி கேட்க வேண்டும் என நினைக்கின்றனர். அவ்வாறு கேட்கும்போது, சுருக்கமாக கேள்வி கேட்காமல், வரலாற்றை சொல்ல நினைக்கின்றனர். ஒரு கேள்விக்கு, 10 நிமிடம் பதில் சொல்லப்படுகிறது. இது தேவையே இல்லை. சுருக்கமாக சொன்னால், அமைச்சர்களுக்கு புரியும்.
நீண்ட நேரம் சபை நடப்பதால், பலரும் சோர்வடைந்து வருகின்றனர். இதனால், சபையை சுறுசுறுப்பாக நடத்த முடியவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

