UPDATED : ஜூன் 29, 2024 11:42 PM
ADDED : ஜூன் 29, 2024 11:15 PM

சென்னை: தமிழகத்தில் முழு மதுவிலக்குக்கு சாத்தியமில்லை என்றும், அதை கொண்டு வருவதற்கான சூழலும் இல்லை என்றும், சட்டசபையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி அறிவித்தார்.
கள்ளச்சாராய குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும், 2024ம் ஆண்டு தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை, அமைச்சர் முத்துசாமி அறிமுகம் செய்தார்.
அப்போது நடந்த விவாதம்:
அமைச்சர் தங்கம் தென்னரசு: கள்ளச்சாராய குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் இந்த சட்டத்தை வலுவாக்க, மேலும் சில சட்டப் பிரிவுகளை சேர்ப்பது அவசியமாகிறது. 'அரசு வழக்கறிஞரின் அனுமதி இல்லாமல், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமின் வழங்கக் கூடாது.
'குற்றமற்றவர் என்றும், வெளியே சென்றால் இது போன்ற குற்றங்களில் ஈடுபட மாட்டார் என்றும் நீதிமன்றம் கருதும் வரை, கள்ளச்சாராய குற்றவாளிகளுக்கு ஜாமின் வழங்கக் கூடாது' ஆகிய திருத்தங்களை சேர்க்க வேண்டும்.
அமைச்சர் ரகுபதி: நிதியமைச்சர் குறிப்பிட்ட திருத்தங்கள், சட்டப்பிரிவு 11 மற்றும் 12க்கு இடையில் 11-ஏ என்ற பிரிவில் சேர்க்கப்படும்.
அமைச்சர் துரைமுருகன்: தமிழகத்தில் முழு மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என பலரும் பேசினர். அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரியில் மது விற்கின்றனர். நெருப்பு வளையத்திற்கு நடுவில் கற்பூரமாக தமிழகம் இருக்க முடியாது என, மறைந்த முதல்வர் கருணாநிதி சட்டசபையில் கூறியதை நினைவுபடுத்துகிறேன்.
அமைச்சர் முத்துசாமி: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் போன்ற சம்பவம் இனி நடக்கக் கூடாது என்பதற்காக இந்தச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்ப வத்தில் நேரடியாக சம்பந்தப்பட்ட அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நேரடியாக சம்பந்தப்படுத்த முடியாதவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க, விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தனியாக ஒரு கமிட்டி அமைத்து, அதன் பரிந்துரைகளின் அடிப்படையில் இச்சட்டம் மேலும் வலுப்படுத்தப்படும். கள்ளச்சாராயத்தை ஒழிக்க, நல்ல ஆலோசனைகளை எதிர்பார்க்கிறோம்.
முழு மதுவிலக்கை கொண்டு வருவதில் தமிழக அரசுக்கு விருப்பம் உள்ளது. ஆனால், முழு மதுவிலக்கை உடனே கொண்டு வருவதற்கான சூழல் இல்லை. டாஸ்மாக் மதுக் கடைகளை படிப்படியாக குறைக்க முடிவு செய்து குறைத்தோம்.
ஆனால், ஒரு கடையை மூடினால், பக்கத்து கடையில் கூட்டம் அதிகமாகிறது. முழு மதுவிலக்கு கொண்டு வருவதில் உள்ள நடைமுறை சிக்கல்களை உணர வேண்டும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

