அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் வலுவிழக்கக்கூடும்: வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்தில் டிட்வா புயல் வலுவிழக்கக்கூடும்: வானிலை மையம்
UPDATED : நவ 30, 2025 05:29 PM
ADDED : நவ 29, 2025 11:48 PM

சென்னை: தமிழகத்தின் வட மாவட்டங்களை நெருங்கும் 'டிட்வா' புயல், அடுத்த 3 மணி நேரத்தில் வலுவிழக்கத் துவங்கும் என்றும், கரையை கடக்க வாய்ப்பு இல்லை என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் இலங்கை அருகே உருவான டிட்வா புயல், தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக, தென் மற்றும் கடலோர மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்க்கிறது. இலங்கை கடலோரப் பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய டிட்வா புயல், வடக்கு வடமேற்கு திசையில் மணிக்கு 5 கி.மீ., வேகத்தில் நகர்ந்து வருகிறது.
தற்போது சென்னைக்கு 150 கிலோ மீட்டரிலும், புதுச்சேரிக்கு 90 கிலோ மீட்டரிலும், வேதாரண்யத்திற்கு 170 கிலோ மீட்டர் தொலைவிலும் டிட்வா புயல் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. புயலின் நகர்வை கணிக்கும்போது, அது கரையை ஒட்டியே நிலவும்; கரையை கடக்க வாய்ப்பு இல்லை.
'அக்., 1 முதல் நவ., 29 வரையிலான வடகிழக்கு பருவ மழை காலக்கட்டத்தில், 36 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இது, இயல்பை விட 3 சதவீதம் அதிகம்' என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

