ADDED : மார் 27, 2025 10:55 PM
சென்னை:தமிழகத்தில், 16 மாவட்டங்களை சேர்ந்த, 43 தாலுகாக்களில், 597 கிராமங்கள் மலைப்பகுதிகளில் அமைந்துள்ளன. இந்தக் கிராமங்களில், அங்கீகாரமில்லாத மனைகளை வரன்முறை செய்வதற்கான திட்டம், 2020ல் அறிவிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்டதால், எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரவில்லை. அதனால், 2024 நவ., 30 வரை விண்ணப்பங்கள் பெறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அவகாசம் முடிந்த நிலையில், மீண்டும் ஒரு முறை இதற்கு அவகாசம் நீட்டிப்பு வழங்க, தமிழக அரசு உத்தரவிட்டது. நகர் மற்றும் ஊரமைப்பு துறையான டி.டி.சி.பி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
மலைப்பகுதிகளில், 2016 அக்., 20க்கு முன் உருவான அங்கீகாரமில்லாத மனைகள், மனைப்பிரிவுகளை வரன்முறைபடுத்தும் திட்டம், 2020ல் அறிவிக்கப்பட்டது.
இதில், வரன்முறை கோரி விண்ணப்பங்கள் பெறுவதற்கான அவகாசம் முடிந்து விட்டது. இந்நிலையில், இதில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்காக, கூடுதல் வாய்ப்பு வழங்கப்படுகிறது. அதன்படி, வரும் நவம்பர் 30 வரையிலான காலத்துக்குள் விண்ணப்பங்களை, 'ஆன்லைன்' முறையில் பதிவு செய்யலாம்.
இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

