சனாதனம் பற்றி பேசியவர்கள் 2026ல் யோசிக்க போகின்றனர் காடேஸ்வரா சுப்ரமணியம் கணிப்பு
சனாதனம் பற்றி பேசியவர்கள் 2026ல் யோசிக்க போகின்றனர் காடேஸ்வரா சுப்ரமணியம் கணிப்பு
ADDED : அக் 17, 2024 01:54 AM

திருச்சி,:திருச்சி, குழுமணி அருகே, சீராத்தோப்பு குருகுல மையத்தில், ஹிந்து முன்னணி நிறுவனத் தலைவர் ராமகோபாலனின் நான்காம் ஆண்டு நினைவு குரு பூஜையையொட்டி, அவரது நினைவிடத்தில் நேற்று ஆத்ம ஜோதி பூஜை மற்றும் புஷ்பாஞ்சலி நிகழ்வு நடைபெற்றது.
இதில் பங்கேற்ற ஹிந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், செய்தியாளர்களிடம் கூறியதாவது:
விவேகானந்தர் நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்து, ஹிந்துக்களை ஒருங்கிணைத்தது போல், ராமகோபாலன் ஹிந்துக்கள் மத்தியில் பெரும் எழுச்சியை ஏற்படுத்தினார்.
அதன்பின் தான், பொட்டு வைப்பதையும், விபூதி பூசுவதையும் பெருமையாகக் கருதும் நிலை ஏற்பட்டது. அவர் வழியில் ஆயிரக்கணக்கானோர் தொண்டர்களாகி உள்ளனர்.
ராமாயணம், மஹாபாரத கருத்துகளை கிராமப்புற மக்களிடம் சேர்க்க வேண்டும் என்ற அவரது கனவின் அடிப்படையில், சீராத்தோப்பில் கல்லுாரி கட்டப்பட்டுள்ளது. அவரது நினைவிடத்தில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில், ஆண்டுதோறும் குரு பூஜை நடைபெறும்.
விநாயகர் சதுர்த்தியின் போது சிலை வைப்பதற்கு, இரு திராவிட அரசுகளும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. நடப்பாண்டு, 15 லட்சம் வீடுகளில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டுள்ளது.
விநாயகர் சதுர்த்தி விழாவை தடுக்கத் தடுக்க, அதன் வேகம் வளர்ந்து கொண்டே இருக்கிறது. வருங்காலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை தடை செய்தால், இந்த அரசு காணாமல் போய்விடும். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்கள் புனரமைப்பு தொடர்பாக, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
கோவில்களுக்கு என தனி வாரியம் அமைக்கக் கோரியும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வரும் என நம்புகிறோம்.
தமிழகத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத அரசு நடைபெற்று வருகிறது; பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்து விட்டது.
தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., ஒரே நிலைப்பாட்டில் இருப்பதால், மூன்றாவது அணி வருவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. 2026ல் மாற்றம் வரும் போது, சனாதனத்தை பற்றி பேசியவர்கள், யோசனை செய்யக்கூடிய சூழல் உருவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.

