இது உங்கள் இடம்: உதயநிதி பேச்சை செவிமடுக்காதீர்கள்!
இது உங்கள் இடம்: உதயநிதி பேச்சை செவிமடுக்காதீர்கள்!
ADDED : ஜன 27, 2024 12:54 AM

உலக, தேசிய, தமிழக நிகழ்வுகள் குறித்து தினமலர் நாளிதழுக்கு வாசகர்கள் எழுதிய கடிதம்
ஆர்.பரத்வாஜ், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சமீபத்தில், 'அயோத்தியில் ராமர் கோவில் வருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. ஆனால், அங்குள்ள மசூதியை இடித்து விட்டு கோவில் கட்டியதில் தான் எங்களுக்கு உடன்பாடு இல்லை...' என்று பேசியுள்ளார், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி.
இப்படி அறிவுப்பூர்வமான விஷயங்களை, இந்த பட்டத்து இளவரசர் ஒருவரால் மட்டுமே பேச முடியும். 500 ஆண்டு கால பிரச்னை, 150 ஆண்டு கால நீதிமன்ற விசாரணைகள், இறுதியாக ஐந்து உச்ச நீதிமன்ற நீதிபதிகளும், ஒருமனதாக தீர்ப்பு வழங்கியே ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது.
அந்த ஐந்து நீதிபதிகளிலும் ஒருவர், முஸ்லிம்; அயோத்தியில் கோவில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன என தெரிவித்த, தொல்லியல் நிபுணர் கே.கே.முகமது என்ற முஸ்லிம் பற்றி எல்லாம் உதயநிதிக்கு தெரியாதா?
முஸ்லிம் சமுதாயத்தினருக்கு ஒரு வேண்டுகோள்...
அயோத்தி விவகாரம் அல்லா - ராமர் பிரச்னை இல்லை. மாறாக, ஹிந்துக்கள் நிலமா அல்லது முஸ்லிம்கள் நிலமா என்று தகராறு எழுந்து, அது தீர்க்கப்பட்டுள்ளது
கடந்த 2019ல் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்தவுடன், அதை தி.மு.க. உட்பட எந்த ஒரு பெரிய கட்சியும் எதிர்க்கவில்லை; இன்று, இப்படி பேசுவது ஏன் என்று சிந்தியுங்கள்
அன்று ஹிந்து - முஸ்லிம் பிரச்னையை துாண்டி, ஆங்கிலேயன் நம்மை ஆண்டான். இன்று உதயநிதி போன்றோர் அதே பாணியில் இப்படி பேசுகின்றனர். இதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டாம்
உங்களின் ஓட்டு உதயநிதிக்கு வேண்டும். இப்படி வீண் பேச்சுகளை பேசினால் நீங்கள் மனம் குளிர்ந்து விடுவீர்கள் என, உங்களை தரம் தாழ்த்தி பார்க்க முயற்சிக்கிறார். ஜாக்கிரதையாக இருங்கள்
தாங்கள் செய்த சாதனைகளை கூறி என்றாவது இவர்கள் ஓட்டு கேட்டு இருப்பரா... இவர்களிடம் இருப்பது இரண்டே வியூகம் தான்... இலவச அறிவிப்புகள் அல்லது மதம், ஜாதி வெறியை துாண்டும் பேச்சுக்கள்
ஓட்டு வேண்டும் என்ற ஒரே காரணத்தால் ஸ்டாலின் உட்பட, அவரது கட்சியினர் அன்று வேல் பிடித்து வெட்கம் இல்லாமல் நின்று, 'போஸ்' கொடுத்தனர்; ஆட்சிக்கு வந்ததும் ஒரு ஹிந்து பண்டிகைக்கு கூட வாழ்த்து கூறுவதில்லை. இதிலிருந்தே இவர்களின் வஞ்சகத்தை புரிந்து கொள்ளுங்கள்.
பாரத தேசத்தில் நாம் எல்லாரும் உறவினர்களே. நம்மை பிரித்து ஆண்ட ஆங்கிலேயர் புத்தி, ஈ.வெ.ராமசாமியை துதிபாடும் உதயநிதியிடம் இருப்பது இயற்கையே.
எனவே, அவரது பேச்சை செவிமடுக்காதீர்கள்!

