sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

திருமா, வைகோ, சீமான் கேட்ட சின்னம் மறுப்பு

/

திருமா, வைகோ, சீமான் கேட்ட சின்னம் மறுப்பு

திருமா, வைகோ, சீமான் கேட்ட சின்னம் மறுப்பு

திருமா, வைகோ, சீமான் கேட்ட சின்னம் மறுப்பு


ADDED : மார் 27, 2024 11:54 PM

Google News

ADDED : மார் 27, 2024 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கேட்ட பானை; ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ கேட்ட பம்பரம்; நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்ட படகு சின்னம் கிடையாது என, தேர்தல் கமிஷனும், கோர்ட்டும் கைவிரித்து விட்டன. எனவே, அக்கட்சிகளின் வேட்பாளர்கள், வேறு சின்னத்தில் போட்டியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எந்த தேர்தலிலும் இல்லாத அளவிற்கு, இந்த தேர்தலில் சின்னம் பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. அங்கீகாரம் பெற்ற கட்சிகளுக்கு, தேர்தல் கமிஷன் வழங்கியுள்ள நிரந்தர சின்னம் உண்டு. அதில், அக்கட்சி வேட்பாளர்கள் போட்டியிடுவர்.

பதிவு செய்து, ஆனால் அங்கீகாரம் பெறாத கட்சிகள், பொது சின்னம் பெற, குறிப்பிட்ட காலத்துக்குள் விண்ணப்பித்தால், முன்னுரிமை அடிப்படையில் தேர்தல் கமிஷன் பொது சின்னம் வழங்கும்.

விண்ணப்பிக்காத கட்சிகள் மற்றும் சுயேச்சைகள், தேர்தல் கமிஷன் வெளியிட்டுள்ள 193 சுதந்திர சின்னங்களில் ஏதேனும் மூன்று சின்னங்களை தேர்வு செய்து, வேட்புமனுவில் குறிப்பிட வேண்டும்.

வேட்புமனு வாபஸ் பெறும் நேரம் முடிந்த பின், அவரவர் கேட்ட மூன்றில் ஏதாவது ஒரு சின்னத்தை கமிஷன் ஒதுக்கி தரும். ஒரே சின்னத்தை இரண்டு, மூன்று பேர் கேட்டால், குலுக்கல் முறையில் ஒதுக்கப்படும்.இது தான் சின்னம் ஒதுக்கும் நடைமுறை.

லோக்சபா தேர்தலில் இரண்டு தொகுதிகளில், சட்டசபை தேர்தலில் ஆறு தொகுதிகளில் வெற்றி அல்லது 8 சதவீத ஓட்டுகளை பெற்றால், அது மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் வழங்கும்.

பானை விழுந்தது


தி.மு.க., கூட்டணியில் சிதம்பரம், விழுப்புரம் பெற்ற வி.சி., ஏற்கனவே சட்டசபை தேர்தலில் பெற்ற பானை சின்னத்தில் போட்டியிட தேர்தல் கமிஷனில் விண்ணப்பம் அளித்தது. கமிஷன் முடிவு சொல்ல தாமதம் ஆனதால், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.

தேர்தல் கமிஷன் விரைவாக முடிவு எடுக்க கோர்ட் உத்தரவிட்டது. பானை சின்னம் ஒதுக்க முடியாது என தேர்தல் கமிஷன் தெரிவித்தது. இதனால், அக்கட்சி வேறு சின்னத்தை தேடும் நிலை ஏற்பட்டுள்ளது.

பம்பரம் உடைந்தது


தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ள மற்றொரு கட்சியான ம.தி.மு.க., திருச்சியில் போட்டியிடுகிறது. அதன் பொதுச்செயலர் வைகோ, பம்பரம் சின்னம் ஒதுக்க தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச், வைகோவின் விண்ணப்பம் மீது காலை 9:00 மணிக்குள் தேர்தல் கமிஷன் முடிவெடுக்க உத்தரவிட்டது.

பிற்பகலில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைகோ தரப்பில் ஆஜரான அஜ்மல் கான், பம்பரம் சின்னம் தர முடியாது என தேர்தல் கமிஷன் கூறி விட்டதாக சொன்னார்.

''கடந்த 2010ல் ம.தி.மு.க.,வின் அங்கீகாரம் ரத்தான நிலையிலும், 2019 வரை பம்பரம் சின்னம் ஒதுக்கப்பட்டது. தற்போது ஒதுக்கீடு சின்னமாக பம்பரம் இல்லை என்பதால், அதை பொது சின்னமாக அறிவித்து, எங்களுக்கு ஒதுக்க வேண்டும்,” என்றார்.

'ஒதுக்கீடு பட்டியலில் இல்லாத சின்னத்தை பொதுசின்னமாக கருத முடியுமா; அப்படி கருதி பம்பரம் சின்னத்தை ம.தி.மு.க.,வுக்கு ஒதுக்க முடியுமா?' என நீதிபதிகள் கேட்டனர்.

தேர்தல் கமிஷன் தரப்பில் ஆஜரான நிரஞ்சன், ''ஒரே மாநிலத்தில், இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டால் மட்டுமே முன்பு வழங்கிய ஒதுக்கீடு சின்னத்தை தர முடியும். பம்பரம் சின்னத்தை பொது சின்னமாக தேர்தல் கமிஷன் அறிவிக்கவில்லை. எனவே, அதை எவருக்கும் ஒதுக்க முடியாது,'' என்றார்.

இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், 'ம.தி.மு.க., இரண்டு தொகுதிகளில் போட்டியிடடால் பம்பரம் கேட்கலாம். அந்த நிபந்தனையை வைகோ தரப்பு பூர்த்தி செய்யவில்லை. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால், தேர்தல் கமிஷனுக்கு உத்தரவு எதையும் பிறப்பிக்க முடியாது' எனக் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.சுயேச்சை சின்னங்கள் பட்டியலிலும் பம்பரம் இல்லை என்பதால், வைகோ திருச்சியில் போட்டியிடும் தன் மகன் துரைக்கு புதிய சின்னம் தேடும் சூழல் ஏற்பட்டுள்ளது.

படகும் மூழ்கியது


சீமானின் நாம் தமிழர் கட்சி, இதற்கு முன் நடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்டது. இம்முறை அக்கட்சி உரிய காலத்திற்குள் விண்ணப்பிக்காததால், கரும்பு விவசாயி சின்னம் வேறு கட்சிக்கு போய்விட்டது.

அந்த சின்னத்தை கேட்டு சீமான் கோர்ட்டை நாடினார்; சாதகமான உத்தரவு வரவில்லை. தேர்தல் கமிஷன் அவருக்கு 'மைக்' சின்னம் ஒதுக்கியது. அது சீமானுக்கு பிடிக்கவில்லை. படகு அல்லது பாய்மர படகு கேட்டு மனு கொடுத்தார். தேர்தல் கமிஷன் மறுத்து விட்டது. எனவே, அவரது கட்சி வேட்பாளர்கள் மைக் சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.

சீமான் சந்தேகம்




சீமான் நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்டு, மைக் சின்னத்தை அறிமுகப்படுத்தினார்.

''பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்திருந்தால் கேட்ட சின்னம் கிடைத்திருக்கும். அந்த கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு கேட்டது கிடைக்கிறது,” என்று சீமான் குமுறினார்.

''இரண்டு தொகுதிகளில் நின்றால் பம்பரம் தருவோம் என்று வைகோவுக்கு சொல்கிறது தேர்தல் கமிஷன். விடுதலை சிறுத்தைகள் கட்சி இரண்டு தொகுதிகளில் நிற்கிறது. அவர்களுக்கு ஏன் பானை சின்னம் கொடுக்கவில்லை?” என்று கேட்டார்.

தி.மு.க., - பா.ஜ., இடையே ஒப்பந்தம் உள்ளது. தமிழகத்தில் ஏழு தொகுதிகளில் வெற்றி பெற பா.ஜ.,வினர் கேட்டுள்ளனர். ஐந்து தொகுதிகள் விட்டுத் தருவதாக ஒப்புக் கொண்டதால் தான், பொன்முடி வழக்கில் தளர்வு ஏற்பட்டுள்ளது என்று சீமான் மேலும் சொன்னார்.

பா.ஜ.,வை முழுமையாக தி.மு.க., எதிர்ப்பதாக இருந்தால், பா.ஜ., நிற்கும் தொகுதிகளில் நேரடியாக தி.மு.க., நின்றிருக்க வேண்டும்; கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிஇருக்கக் கூடாது என்பது அவர் வாதம்.

'இது ஓரவஞ்சனை!'



விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி பாவலன், “ஒரு எம்.பி., நான்கு எம்.எல்.ஏ.,க்கள் வைத்துள்ள எங்களுக்கு பானை சின்னம் தர முடியாது என்கின்றனர். எம்.பி., - எம்.எல்.ஏ., ஒருத்தர் கூட இல்லாத பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்கு, அவர்கள் கேட்ட சின்னம் தரப்பட்டுள்ளது. இது ஓரவஞ்சனை,” என்று கொந்தளித்தார்.






      Dinamalar
      Follow us