ADDED : பிப் 28, 2024 08:20 AM

ஹிந்துக்களின் முக்கிய யாத்திரை தலம் வாரணாசி. இத்தொகுதி எம்.பி.,யாக பிரதமர் மோடி வெற்றி பெற்ற பிறகு வாரணாசி புதுப்பொலிவு பெற்றுள்ளது. தூய்மை பெற்ற நகராக உள்ளதோடு பல வசதிகளையும் செய்து கொடுத்துள்ளார். அதுபோல ஹிந்துக்களின் புண்ணிய பூமியான ராமேஸ்வரத்தையும் புதுப்பொலிவு பெற செய்ய தேவையான சில அடிப்படை வசதிகளை நிறைவேற்றினால் நன்றாக இருக்கும். பிரதமர் மோடி பார்வைக்காக இக்கட்டுரை.
ஒரு புறம் அமைதியான கடலையும், மறுபுறம் ஆர்ப்பரிக்கும் அலைகள் கொண்ட கடலையும் தனக்கு கிடைத்த வரமாக பெற்றுள்ளது ராமேஸ்வரம் தீவு. நாட்டை ஆண்ட மன்னர்கள் முதல் இந்தியாவை 200 ஆண்டுகள் ஆட்சி செய்த ஆங்கிலேயர்கள் வரை இத்தீவுக்கு வந்து சென்றுள்ளனர். அதுமுதல் தற்போது வரை பல மாற்றங்களையும் முன்னேற்றங்களையும் சந்தித்து வருகிறது. இத்தீவு மேலும் வளர்ச்சி பெற பல்வேறு விஷயங்களை முன்னெடுக்க வேண்டிய அவசியம் தற்போது தேவையாக உள்ளது.
நான்கு வழிச்சாலை அவசியம்
நாட்டிலுள்ள 12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றாக விளங்கும் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். ராமநாதபுரம் - ராமேஸ்வரம் ரோடு இரு வழிச்சாலையாக உள்ளது. ஆனால் மதுரையிலிருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை உள்ளது. ராமேஸ்வரம் வரை அதை நீட்டிக்க வேண்டும். இதற்கான ஒப்புதலை மத்திய அரசு வழங்கி விட்டாலும் பணிகளோ மந்த நிலையிலேயே உள்ளன. கடல் மீது நான்கு வழிச்சாலை அமைக்கும்போது மக்கள் நின்று பார்க்கும் வசதி அமைக்க வேண்டும்.
பாம்பன் - தனுஷ்கோடி ரயில்
நூறாண்டுகளுக்கு முன் பாம்பன் ரயில் நிலையம் சந்திப்பாக இருந்திருக்கிறது. போட்மெயில் இங்கிருந்து இயக்கப்பட்டது. மீண்டும் தனுஷ்கோடிக்கு பாம்பனிலிருந்து ரயில்கள் இயக்க வேண்டும்.
சிறப்பு ரயில்கள் தேவை
தென் மாவட்டங்களிலிருந்து புவனேஸ்வர், வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு ரயில் சேவை உள்ளது. ஆனால் டில்லி உள்ளிட்ட சில நகரங்களுக்கு நேரடி ரயில்கள் இல்லை. ராமேஸ்வரத்திலிருந்து டில்லி உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில்களை இயக்க வேண்டும். தற்போது பாம்பன் கடலில் ரயில் தூக்குபாலப் பணிகள் நடக்கிறது.
மின்மயமாக்க வேண்டும்
ராமேஸ்வரம் ரயில்வே லைனை மின்மயமாக்க வேண்டும்.
இதுபோன்ற பல்வேறு அடிப்படை கட்டமைப்பு வசதிகளை செய்ய பிரதமர் மோடி உத்தரவிட்டால் ராமேஸ்வரம் வரும் பக்தர்களுக்கு உதவியாக அமையும்.

