'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 23,24,25ல் சென்னையில் நடக்கிறது
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி வரும் 23,24,25ல் சென்னையில் நடக்கிறது
ADDED : மார் 17, 2024 04:26 AM

சென்னை : பிளஸ் 2 முடிக்கும் மாணவர்களுக்கு, உயர்கல்வி ஆலோசனைகள் வழங்குவதற்கான, 'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சி, வரும், 23ம் தேதி முதல் 3 நாட்கள் நடக்கிறது.
பிளஸ் 2 பொது தேர்வு முடிக்கும் மாணவர்கள், அடுத்து உயர்கல்வியில் சேர்வதற்கான ஆலோசனைகள் வழங்க, 'தினமலர்' சார்பில், ஒவ்வொரு ஆண்டும் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப் படும்.
இந்த ஆண்டுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி, தினமலர் மற்றும் கோயம்புத்துார் ஸ்ரீகிருஷ்ணா இன்ஸ்டிடியூஷன்ஸ் நிறுவனங்களின் சார்பில், வரும், 23, 24 மற்றும், 25ம் தேதிகளில் சென்னையில் நடத்தப்படுகிறது.
சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில், மூன்று நாட்களும் காலை, 10:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை இந்த நிகழ்ச்சி நடக்கிறது.
ஆலோசனை
இந்த நிகழ்ச்சியில், மாணவர்களுக்கான உயர்கல்வி கருத்தரங்கம் நடக்கும். அதில், 20க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் நேரடி ஆலோசனை வழங்க உள்ளனர்.
எதிர்காலத்தை ஆளப்போகும் துறைகள், 'நீட்' மற்றும் ஜே.இ.இ., தேர்வுகளில் சாதிப்பது, 'ஸ்டார்ட் அப்' நிறுவன வாய்ப்புகள் என, பல்வேறு துறைகள் குறித்து, கல்வியாளர்கள் பேச உள்ளனர்.
'அனைவருக்கும் ஐ.ஐ.டி.,' என்ற தலைப்பில், சென்னை ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி பேச உள்ளார். 'ஸ்பேஸ் சயின்ஸ்' குறித்து, ஸ்ரீஹரிகோட்டா இஸ்ரோ மையத்தின் இயக்குனர் ராஜராஜன் விளக்கம் தருகிறார்.
வருங்காலத்தை ஆளப்போகும் தொழில்நுட்பம் குறித்து, கோப்ரூகல் நிறுவனத்தின் நிறுவனர் குமார் வேம்பு, 'நீங்களும் சாதனையாளர் ஆகலாம்' என்ற தலைப்பில், இப்போபே நிறுவனத்தின் நிறுவனர் மோகன் பேசுகின்றனர்.
மேலும், ஸோஹோ நிறுவனத்தின் மனித வள பிரிவு தலைவர் சார்லஸ் காட்வின் வேலைவாய்ப்பு திறன்கள் குறித்தும், இந்திய பாதுகாப்புத்துறையின் விஞ்ஞானி டாக்டர் வி.டில்லிபாபு 'நீங்களும் விஞ்ஞானி ஆகலாம்' என்ற தலைப்பிலும், கல்வி ஆலோசகர் அஸ்வின் கரியர் கவுன்சிலிங் குறித்தும் பேச உள்ளனர்.
நீட், ஜே.இ.இ., தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறுவதுடன், அதில் சாதித்து உயர்கல்வியை எட்டுவது குறித்து, கல்வி ஆலோசகர் நெடுஞ்செழியன் ஆலோசனை தர உள்ளார்.
இந்நிகழ்ச்சியில், 80க்கும் மேற்பட்ட முன்னணி கல்வி நிறுவனங்களின் ஸ்டால்கள் இடம் பெறும். அங்கு, கல்வி நிறுவன பிரதிநிதிகள், மாணவர் சேர்க்கை குறித்த விபரங்களை வழங்குவர்.
இணையும் நிறுவனங்கள்
கோவை ஸ்ரீராமகிருஷ்ணா எஜுகேஷனல் இன்ஸ்டிடியூஷன்ஸ், அம்ரிதா விஷ்வ வித்யாபீடம் ஆகியன, 'பவர்டுபை' நிறுவனங்களாக செயல்படும்.
ராஜலட்சுமி இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, பிரின்ஸ் குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், வேல்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ், டெக்னாலஜி மற்றும் நியூ பிரின்ஸ் ஸ்ரீபவானி காலேஜ் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி மற்றும் ஷிவ் நாடார் பல்கலை ஆகிய நிறுவனங்கள், இணைந்து வழங்குகின்றன.
குகா என்ற ஜெர்மன் நிறுவனத்தின் ரோபோ, ட்ரோன், செயற்கை நுண்ணறிவான ஏ.ஐ., போன்ற நவீன தொழில்நுட்பங்கள் சார்ந்த, சிறப்பு கண்காட்சி, வழிகாட்டி நிகழ்ச்சியில் இடம் பெற உள்ளது. இதில், ரோபோ, ட்ரோன், செயற்கை நுண்ணறிவு செயல்பாடுகளை, மாணவர்கள் நேரடி அனுபவமாக உணரலாம்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி இலவசம் ஆகும். மேலும், www.kalvimalar.com என்ற இணையதளத்திலும், 91505 74441 என்ற மொபைல்போன் எண்ணில், வாட்ஸாப்பில் பதிவு செய்யவும். கருத்தரங்கில் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு, சிறந்த பதில் அளிப்பவர்களுக்கு, லேப்டாப், டேப் மற்றும் வாட்ச் பரிசாக வழங்கப்படும்.

