மாநகராட்சி சொத்தை மனையாக பிரித்து விற்க நிறைவேற்றிய தீர்மானம் ரத்து
மாநகராட்சி சொத்தை மனையாக பிரித்து விற்க நிறைவேற்றிய தீர்மானம் ரத்து
UPDATED : அக் 30, 2024 07:42 AM
ADDED : அக் 29, 2024 03:36 AM

கோவை : கோவை மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தை, மனைகளாக பிரித்து விற்றுக் கொள்ள அனுமதி அளித்து, 1992ல் அப்போதைய கலெக்டரால் நிறைவேற்றிய தீர்மானம், நேற்று நடந்த மாமன்ற கூட்-டத்தில் ரத்து செய்யப்பட்டது. அடுத்த கட்டமாக, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற, நகர-மைப்பு பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுஉள்ளது.
கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம், ஒண்டிபுதுாரில், 1960ல், 6.14 ஏக்கரில் எஸ்.எம்.எஸ்., லே - அவுட் உருவானது. அதில், 65 மனைகள் பிரிக்கப்பட்டன. பொது ஒதுக்கீடு இடமாக, பள்ளி கட்டுவதற்கு 43 சென்ட், விளையாட்டு மைதானத்துக்கு 19 சென்ட் ஒதுக்கப்பட்டது.
7 மனைகள்
கடந்த 1972ல் அந்த வரைபடம் திருத்தப்பட்டு, பொது ஒதுக்கீடு இடத்தில், புதிதாக ஏழு மனைகளை பிரித்து, அப்போ-தைய சிங்காநல்லுார் நகராட்சியில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள், கோயம்புத்துார் முன்சீப் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், பள்ளி மற்றும் விளையாட்டு மைதானத்துக்கு, 62 சென்ட் ஒதுக்கியிருக்க வேண்டும் என உத்தரவா-னது. கடந்த 1977ல், கோவை சப் - ஆர்டினேட் கோர்ட்டில் நடந்த விசாரணையில், நில உரிமையாளருக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்தது.
தீர்மானம்
இந்த உத்தரவை, 1980ல் ரத்து செய்த ஐகோர்ட், 'பள்ளி மற்றும் மைதானத்துக்கு இடம் ஒதுக்க வேண்டும்; வரைபடத்தில் மாற்றம் செய்ய வேண்டுமெனில், சம்பந்தப்பட்ட துறையினரிடம் முறையாக அனுமதி பெற வேண்டும்' என உத்தரவிட்டது. ஐகோர்ட் உத்தரவிட்டது, 1980ம் ஆண்டு. ஆனால், 1972ல் திருத்திய வரைபடத்தை அடிப்படையாக கொண்டு, மூன்று மனைகளை விற்க, 1992ல் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி, அக்காலகட்டத்தில் தனி அதிகாரியாக செயல்-பட்ட கலெக்டரிடம் அனுமதி பெறப்பட்டு உள்ளது.
அதை ஆதாரமாகக் கொண்டு, காலியிட வரி நிர்ணயிக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. சட்டச் சிக்கல் ஏற்-பட்டதால், அக்கோப்பு நிலுவையில் வைக்கப்பட்டது. அவ்விடத்தை உரிமை கொண்டாடியவர்கள், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். அதில், மாநகராட்சியில் மீண்டும் விண்ணப்பிக்கவும், மனுதாரரின் கோரிக்-கையை பரிசீலிக்கவும் அறிவுறுத்தப்பட்டது.
அதன்படி, மீண்டும் காலியிட வரி நிர்ணயிக்க கோரி விண்ணப்பிக்கப் பட்டது.
கோப்புகளை ஆய்வு செய்த மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், 'மாநகராட்சிக்கு சொந்தமான இடம்; போலி ஆவணங்கள் அடிப்படையில், காலியிட வரி நிர்-ணயிக்க கோரிய விண்ணப்பம் நிராகரிக்கப்படுகிறது' என பதிலளித்திருக்கிறார்.
விவரித்தார்
இச்சூழலில், மாநகராட்சி மீது கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில், மாநகராட்சி கமி-ஷனர் நேரில் ஆஜராகி, விளக்கினார். அதையடுத்து, அவமதிப்பு வழக்கை ரத்து செய்த ஐகோர்ட், மாநகராட்-சிக்கு சொந்தமான இடங்களை மீட்கவும் அறிவுறுத்தியது. இது தொடர்பாக நேற்று நடந்த மாமன்ற கூட்டத்தில், கிழக்கு மண்டல தலைவர் லக்குமி இளஞ்செல்வி கேள்வி எழுப்பினார்.
அதற்கு விளக்கம் அளித்த கமிஷனர், 'ஐகோர்ட்டில் தொடரப்பட்ட அவமதிப்பு வழக்கு ரத்தாகி விட்டது. மாநகராட்சிக்கு சொந்தமான விளையாட்டு மைதானத்தில் உள்ள ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்' என அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 1992ல் அப்போதைய கலெக்டரால் நிறைவேற்றிய தீர்மானத்தை ரத்து செய்யும் தீர்மானம், ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

