ADDED : டிச 20, 2025 06:35 AM

சென்னை : பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம், அடிக்கடி முடங்குவதாக புகார் கூறப்படுகிறது.
தமிழகத்தில், 589 சார் - பதிவாளர் அலுவலகங்கள் வாயிலாக பத்திரப்பதிவு பணிகள் நடக்கின்றன. இதில், பெரும்பாலான பணிகள், 'ஆன்லைன்' முறைக்கு மாற்றப்பட்டு வருகின்றன. இதற்காக பொதுமக்களும், ஆவண எழுத்தர்களும், பதிவுத்துறையின் இணையதளத்தை நம்பியுள்ளனர்.
ஆனால், இந்த இணையதளத்தின் பயன்பாடு அதிகரிக்கும் போது, அவ்வப்போது முடங்குவதாக புகார் எழுந்தது.
சில நாட்களில், பத்திரங்கள் அதிகமாக தாக்கலாகும் போது, தொழில்நுட்ப ரீதியாக இதுபோன்ற பிரச்னை ஏற்படுவதாக கூறப்பட்டது. தற்போது, இப்பிரச்னை அதிகரித்துள்ளதால், பொது மக்கள் அவதிக்கு ஆளாகின்றனர்.
இது குறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
பத்திரப்பதிவு, வில்லங்க சான்று, பிரதி ஆவணம் பெறுவது போன்ற பணிகளுக்கான தகவல்களை உளளீடு செய்யும் போது தான், இப் பிரச்னை ஏற்பட்டு வந்தது. தற்போது, இணையதளத்தில் எந்த பகுதிக்குள்ளும் செல்ல முடியாத அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது.
இணையதளத்தின் முகப்பு பக்கம் மட்டுமே திறக்கிறது. அதில், ஏதாவது ஒரு பகுதிக்குள் சென்று கட்டணம், அலுவலகங்கள் முகவரி அறிதல் போன்ற அடிப்படை விஷயங்களை கூட பார்க்க முடியாத அளவுக்கு பிரச்னை ஏற்படுகிறது. அதிகாரிகளிடம் கேட்டால், 'சிறிது நேரத்தில் சரியாகி விடும்' என்று மட்டுமே பதில் வருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பதிவுத்துறை இணையதளத்தில் கூடுதலாக, 'ஸ்டார் 3.0' மென்பொருள் சேர்க்கப்பட்டு, சோதனை பணிகள் நடந்து வருவதால், இப்பிரச்னை வரலாம். விரைவில் இது சரிசெய்யப்படும்' என்றனர்.

